லைஃப்ஸ்டைல்
நீராவி

நீராவி பிடிப்பதால் கொரோனா வைரஸ் அழியுமா?

Published On 2021-05-20 07:19 GMT   |   Update On 2021-05-20 07:19 GMT
நீராவி பிடிப்பதால் கொரோனா வைரஸ் அழியுமா? என்பது குறித்து நெல்லை அரசு சித்தா டாக்டர் மானக்‌ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் மானக்‌ஷா கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: கொரோனா தொற்று வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன?

பதில்: பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதுவே இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க சிறந்த வழிமுறையாகும். பொதுவாக வெயில் காலங்களில் இயற்கையாகவே மனித உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அந்த நேரங்களில் இது போன்ற தொற்று நோய்கள் எளிதாக பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, நாம் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கக் கூடிய உணவு பொருட்களை உட்கொண்டால் இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும். உடலில் நீர்ச்சத்து அதிகரித்தால் எதிர்ப்பு சக்தி தானாக வந்து விடும். மேலும் அன்றாட உணவில் கிராம்பு, லவங்கப்பட்டை, ஓமம் உள்ளிட்ட பொருட்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி: தொற்று பாதிக்காமல் இருக்க என்னென்ன உணவு பொருட்களை உட்கொள்ளலாம்?

பதில்: தினமும் ஒரு கோழி முட்டை வேகவைத்து உட்கொள்ளலாம். அனைத்து வகையான கீரைகளையும் உட்கொண்டு வரலாம். இவை எல்லாம் நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய உணவு பொருட்கள் ஆகும். மேலும் ஒரு டம்ளர் பாலில் மிளகு, மஞ்சள் கலந்து குடிக்கலாம். வெற்றிலையை தேனில் கலந்து சாப்பிடலாம். தேனில் கலந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம். தினமும் கொதிக்க வைத்த நீரை பருகி வருவது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பது மிகச் சிறந்தது.

கேள்வி: தொற்று பாதித்தவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவு பொருட்கள்?

பதில்: பொதுவாக நோய் பாதித்தவர்கள் முதலில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று, நமது உணவை தேர்ந்தெடுக்க வேண்டும். தொற்று பாதித்தவர்கள் வேக வைத்த நாட்டு கொண்டக்கடலை, பாசிப்பயறு, வேர்கடலை உள்ளிட்டவைகளை உட்கொள்ளலாம்.

கேள்வி: பொது இடங்களில் நீராவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பதில்: கண்டிப்பாக பொது இடங்களில் நீராவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பொது இடங்களில் ஒருவர் நீராவி பிடிக்கும்போது அவர் விடக்கூடிய மூச்சுக்காற்று மூலமாக இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக பொது இடங்களில் நீராவி பிடிக்க கூடாது.

கேள்வி: நீராவி பிடிப்பதால் கொரோனா வைரஸ் அழியுமா?

பதில்: நீராவி பிடிப்பதால் வைரஸ் முற்றிலும் அழியும் என்று நாம் உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால், நீராவி பிடிப்பதனால் மூக்கு அடைப்பு, சளி ஆகியவை குணமாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஆரம்ப காலத்தில் உள்ளவர்கள் நீராவி பிடிப்பதால் அவர்கள் அந்த தொற்றிலிருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. ஒருவர் நீராவி பிடித்த பாத்திரத்தையோ, போர்வையையோ உடனே மற்றொருவர் பயன்படுத்த கூடாது.

அதனை சுத்தப்படுத்திய பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் நீராவி கண்டிப்பாக பிடிக்கக்கூடாது. நீராவி பிடிக்கும்போது மஞ்சள், நொச்சி இலை, துளசி ஆகியோவற்றை சேர்த்து பிடித்தால் நல்லது.

கேள்வி: கபசுர குடிநீர் பருகுவதால் தொற்று கட்டுப்படுமா?

பதில்: கபசுர குடிநீர் பருகுவதால் தொற்று கட்டுப்படும் என்று முற்றிலுமாக கூறிவிட முடியாது. ஆனால், கபசுர குடிநீர் அன்றாடம் பருகி வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது. தொற்று பாதிக்காதவர்கள் கபசுர குடிநீர் ஒரு வாரத்திற்கு ஒரு முறை குடித்தாலே போதுமானது.

கேள்வி: கொரோனா வைரஸ் யாரை அதிகமாக பாதிக்கிறது?

பதில்: இந்த வைரஸ் தொற்று பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.

கேள்வி: கொரோனா தடுப்பூசி பற்றி?

பதில்: பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News