செய்திகள்
கொள்ளை

வியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை தாக்கி ரூ.10 லட்சம் வழிப்பறி கொள்ளை

Published On 2021-07-29 09:34 GMT   |   Update On 2021-07-29 09:34 GMT
வியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை தாக்கி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த கடைகளில் எப்போதுமே பிரியாணி வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் கூடுவார்கள்.

இங்கு மண்ணடியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

பிரியாணி கடைகளில் விற்பனையாகும் பணத்தை சுரேந்தர் வசூல் செய்து தலைமை அலுவலகத்துக்கு எடுத்து செல்வது வழக்கம்.

நேற்று பகலில் இவர் பிரியாணி கடைகளுக்கு சென்று அங்கு விற்பனை பணத்தை வசூல் செய்தார்.

பிரியாணி கடைகளில் வசூலான ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வியாசர்பாடி ஸ்டீபன்ஸ் சாலை வழியாக மாலை 6.30 மணியளவில் சுரேந்தர் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அந்த சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் திடீரென சுரேந்தரை வழி மறித்தது.

பின்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய கும்பல், சுரேந்தரை தாக்கி அவரிடம் இருந்து பண பையை பறித்தது. ஆனால் பையை கொடுக்காமல் அவர் கூச்சல் போட்டார்.

இதையடுத்து வழிப்பறி கொள்ளை கும்பல் அவரை சுற்றி வளைத்து மேலும் தாக்கியது.

அப்போது வழிப்பறி கொள்ளையர்கள் சுரேந்தரிடம் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வடசென்னை பகுதி முழுவதும் கொள்ளை கும்பலை பிடிக்க வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரியாணி கடை ஊழியரிடம் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் நேற்று இரவு வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Tags:    

Similar News