ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபடும் பக்தர்கள்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபடும் பக்தர்கள்

Published On 2020-08-03 05:09 GMT   |   Update On 2020-08-03 05:09 GMT
ஊரடங்கால் பூட்டப்பட்ட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்கள். கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். பிரசித்திப்பெற்ற கோவில்களுள் ஒன்றான இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இக்கோவில் பூட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தைலக்காப்பு அபிஷேகமும் பூட்டப்பட்ட கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி நடந்தது.

100 நாட்களுக்கும் மேலாக கோவில் பூட்டப்பட்டு இருப்பதால் சன்னதிக்கு அருகில் சென்று அம்மனை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் பக்தர்கள் உள்ளனர். பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். அதற்கும் தற்போது வழியில்லை. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பூட்டப்பட்ட கோவில் முன்பாக விளக்கேற்றி மாரியம்மனை மனமுருக வேண்டி செல்கிறார்கள்.

ஆடி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக கோவில் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவது அதிகரித்து காணப்படுகிறது. ஆடி மாத முத்துப்பல்லக்கு, ஆவணிமாத வருடாந்திர திருவிழா, ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுமா? என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவற்றை கட்டாயப்படுத்தி கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News