செய்திகள்
பா.ஜனதா மூத்த தலைவர் ராகுல் சின்கா

பா.ஜனதா மூத்த தலைவர் ராகுல் சின்கா பிரசாரம் செய்ய தடை - தேர்தல் கமிஷன் உத்தரவு

Published On 2021-04-14 00:52 GMT   |   Update On 2021-04-14 00:52 GMT
ராகுல் சின்கா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய தடை, நாளை பகல் 12 மணிவரை அமலில் இருக்கும்.
புதுடெல்லி:

மேற்கு வங்காள சட்டசபைக்கான 4-வது கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ந் தேதி நடந்தது. அப்போது, கூச்பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுகுறித்து பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் ராகுல் சின்கா, ‘‘மத்திய படைகள் 4 பேருக்கு பதிலாக 8 பேரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும்’’ என்றார். அவரது பேச்சை தேர்தல் கமிஷன் தானாக முன்வந்து புகாராக எடுத்துக்கொண்டது.

இந்தநிலையில், ராகுல் சின்கா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய தடை, நாளை பகல் 12 மணிவரை அமலில் இருக்கும்.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-

ராகுல் சின்காவின் பேச்சு, மனித உயிர்களை சிறுமைப்படுத்துகிறது. ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. மத்திய படைகளை தூண்டி சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கி விடும். தேர்தல் நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஆகவே, அவசர முக்கியத்துவம் கருதி, நோட்டீசு அனுப்பாமல் அவருக்கு தடை விதித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கவனமாக பேசுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
Tags:    

Similar News