செய்திகள்
வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்

விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் - வேளாண் மந்திரி அறிவிப்பு

Published On 2021-02-25 23:42 GMT   |   Update On 2021-02-25 23:42 GMT
விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் இந்த போராட்டம் சுமார் 3 மாதங்களை எட்டிவிட்டது.

இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு எட்ட முடியவில்லை. அதேநேரம் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று கிசான் மேளாவை மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விவசாயிகள் விவகாரத்தில் அரசு முற்றிலும் உணர்வுடனேயே இருக்கிறது. விவசாய அமைப்புகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். இந்த சட்டங்களில் பல திருத்தங்களை பரிந்துரைத்துள்ளோம். அதைப்போல இந்த சட்டங்களை 1½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, பிரச்சினைக்கு தீர்வு காண குழு அமைக்கவும் பரிந்துரைத்திருக்கிறோம். ஆனால் இந்த பரிந்துரைக்கு அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இந்த சட்டங்களை நிறுத்தி வைத்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த 3 நபர் குழுவினர், பல்வேறு துறையினருடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் தங்கள் பரிந்துரையை கோர்ட்டுக்கு அளிக்க உள்ளார்கள். சுப்ரீம் கோர்ட்டு மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதேநேரம் இந்த பிரச்சினையை தீர்க்க அரசும் முயன்று வருகிறது. அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக இருக்கிறோம். எனினும் அரசு கூறியுள்ள பரிந்துரை குறித்து தங்கள் கருத்துகளை அவர்கள் முதலில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

முன்னதாக கிசான் மேளா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களின் நன்மைகளை எடுத்துரைத்தார்.

குறிப்பாக விவசாயிகள் தங்கள் விளைபொருளை நாட்டின் எந்த பகுதியிலும் விற்பனை செய்ய முடியும் எனவும், மண்டிகளுக்கு வெளியே விற்கப்படும் பொருட்களுக்கு மத்திய-மாநில வரி எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News