செய்திகள்
மரணம்

கிருஷ்ணகிரியில் சூறைகாற்றுடன் மழை: ஓட்டு போட வந்தவர் குடிசை வீடு இடிந்து பலி

Published On 2021-04-06 06:34 GMT   |   Update On 2021-04-06 06:34 GMT
கிருஷ்ணகிரி நகரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், குடிசை இடிந்து விழுந்ததில் பலியானார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியுற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 5 மணிக்கு அதிவேக காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. காற்றின் வேகத்திற்கு, கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காற்றுக்கு பறந்தன. இதே போல் மின்சார வயர்கள், மின்கம்பங்கள் உடைந்ததால், கிருஷ்ணகிரி நகர் முழுவதும் மாலை 5 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், குடிசை இடிந்து விழுந்ததில் பலியானார்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்னஏரிக்கரை சாலையின் பின்புறம் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அக்‌ஷா மசூதியை புதியதாக கட்டி வருகின்றனர். இதனால் புதியதாக கட்டி வரும் மசூதியின் முன்பு இருந்த காலி இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொழுகை செய்ய பெரிய அளவில் குடிசை அமைத்திருந்தனர். இங்கு இஸ்லாமியர்கள் தினமும் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று மாலை இங்கு 25க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடித்த சூறாவளிக் காற்றால், இந்த குடிசை இடிந்து விழுந்தது. இதில் அனைவரும் வெளியே ஓடிவிட்ட நிலையில், ஜாபர் (வயது 60) என்பவர் குடிசையின் அடியில் சிக்கிக்கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜாபர் பரிதாபமாக இறந்தார்.

பலியான ஜாபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் டீ கடை நடத்தி வந்துள்ளார். பின்னர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு சென்று வசித்து வந்தார். தற்போது சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குடிசை இடிந்து விழுந்ததில் அவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News