செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா?- விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

Published On 2021-02-19 01:40 GMT   |   Update On 2021-02-19 01:40 GMT
கோவையில் 3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி நேற்று போட்டுக்கொண்டார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 முதல் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) நிலவரப்படி 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 35 இடங்களில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 14.8 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது. பிரேசில், தென்ஆப்பிரிக்கா வழியாக தமிழகம் வரும் பயணிகளுக்கு, அந்தந்த நாடுகளில் வரும்போதே கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பு இல்லை என உறுதி செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ‘பெண்டவேலண்ட்’ தடுப்பூசி (பிறந்த குழந்தைகளுக்கு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்க போடப்படும் தடுப்பூசி) போடப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை. இந்த தடுப்பூசி போடப்பட்ட மற்ற குழந்தைகள் நலமுடன் உள்ளனர். இந்த குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மேற்கொள்ள தனி டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வுக்கு பின்னர் குழந்தைகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News