ஆன்மிகம்
கொடியேற்றம் நடந்ததை படத்தில் காணலாம். (உள்படம்:-சிறப்பு அலங்காரத்தில் அம்மன்)

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-08-14 05:09 GMT   |   Update On 2021-08-14 05:09 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. 14-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கோவில் குருக்கள், கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதன்காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றுவிழா எளிமையாக நடந்தது.

ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 22-ந் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 29-ந் தேதி அன்னவாகனத்திலும் அம்மன்புறப்பாடு நடைபெற உள்ளது. அடுத்தமாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி சிம்மவாகனத்திலும், தொடர்ந்து விழா நாட்களில் படிச்சட்டங்களில் அம்மன்புறப்பாடு நடக்கிறது.

இந்த புறப்பாடுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வெளியில் புறப்பாடு இல்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முத்துப்பல்லக்கு விழாவும், 17-ந் தேதி விடையாற்றியும் நடக்கிறது. அடுத்தமாதம் 12-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 14-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. தெப்பத்திருவிழா நடைபெறவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News