ஆன்மிகம்
திருவாலங்காடு

வருகிற 29-ந்தேதி திருவாலங்காட்டில் ஆருத்ரா தரிசனம் ரத்து

Published On 2020-12-18 07:46 GMT   |   Update On 2020-12-18 07:46 GMT
திருவாலங்காடு ரத்தின சபாபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேகம், அலங்காரம், சுவாமி புறப்பாடு மற்றும் கொடி மரம் அருகில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகியன ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை.
சிவபெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்து சபைகளில் முதற் சபை திருவாலங்காடு ரத்தின சபாபதீஸ்வரர் சபையாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று இரவு 9 மணி முதல் இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகம் மறுநாள் சிறப்பு அலங்காரம், சுவாமி புறப்பாடு, கொடி மரம் அருகில் வெள்ளை சாத்துபடி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை உற்சவர் நடராஜ பெருமானுக்கு தெற்கு பக்கத்தில் பழைய ஆருத்ரா மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வெள்ளை சாத்துபடி போன்ற நிகழ்ச்சிகள் உபயதாரர்கள், பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட உள்ளது.

உற்சவர் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக நிகழ்ச்சிகளை பக்தர்கள் யூ-டியூப், பொதிகை தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

இரவு 9 மணியளவில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேகம், அலங்காரம், சுவாமி புறப்பாடு மற்றும் கொடி மரம் அருகில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகியன ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை.

மறுநாள் (30-ந்தேதி) பக்தர்கள் தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

காலை 7 மணியளவில் சுவாமி பழையனூர் செல்லுதல், திரும்பி வருதல் மற்றும் அனுகிரக தரிசனம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News