செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

பா.ஜ.க.வில் ஆள் ஆளுக்கு கருத்து சொல்கிறார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-10-09 02:36 GMT   |   Update On 2020-10-09 02:36 GMT
பா.ஜ.க.வில் ஆள் ஆளுக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் கருத்து தெரிவிக்க முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத கால இடைவெளியே இருக்கிறது. எனவே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதில் பிரதான கட்சிகள் முழு வீச்சில் இறங்கி உள்ளன.

இந்தநிலையில், வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் நிலையில், அவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து அக்கட்சியின் கருத்தா? என்று பார்க்க வேண்டும். தமிழக பா.ஜ.க. தலைவர் அல்லது தமிழக பா.ஜ.க.வுக்கு பொறுப்பாளராக இருக்கிற அகில இந்திய தலைவர்களில் ஒருவர் இந்த கருத்தை தெரிவித்தால், நாங்கள் எங்கள் கருத்தை தெரிவிக்க முடியும். பா.ஜ.க.வில் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு கருத்துகளை சொல்கிறார்கள். அதற்கு எப்படி நாங்கள் பதில் சொல்ல முடியும்?. எனவே இதற்கு கருத்து சொல்ல நாங்கள் தயாராக இல்லை.

எங்களை பொறுத்தவரை கூட்டணியை மதிக்கிறோம். தி.மு.க. கூட்டணி கட்சிகளை எவ்வாறு மதிக்கிறது? என்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தங்களது கூட்டணி கட்சிகளை ஒரு பாணியில் பேசினார். அந்த பாணியில் நாங்கள் செயல்பட மாட்டோம், அது போன்று பதில் சொல்ல மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

பொன்.ராதாகிருஷ்ணன் மனதில் அ.தி.மு.க. மீது உள்ள நம்பிக்கை குறைந்து போய் இருக்கும். அவர் கருத்தை, அவர் கூறியிருக்கிறார். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன பிரச்சினை? என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எங்கள் தலைமையிலான ஒரு கூட்டணி தொடருகிறது. மக்கள் விரோத பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம். தொடர்ந்து எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News