செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா

மதுரையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா ரத்தானதால் தெய்வ குற்றம் ஏற்படும்- பக்தர்கள் வேதனை

Published On 2021-04-10 09:36 GMT   |   Update On 2021-04-10 09:36 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்ற பண்டிகை ஆகும்.

இதில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை சிறப்பு வாய்ந்தது. மதுரையில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு நடக்கவில்லை. எனவே நடப்பாண்டில் திருவிழா நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்து வந்தனர்.

இது நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

போதும் பொண்ணு, (அவனியாபுரம்)

மதுரையில் சட்டசபை தேர்தல் கால கட்டத்தில் கொரோனா பரவல் இருந்தது. அப்போது தமிழக அரசு ஏன் தேர்தலுக்கு தடை விதிக்கவில்லை? அப்போது எல்லாம் பரவாத கொரோனா நோய் இப்போது பரவப்போகிறதா? மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு அரசு தடை விதித்து உள்ளது நியாயமற்றது.

செந்தமிழ்ச்செல்வி (ஜெய்ஹிந்துபுரம்)

மீனாட்சி அம்மன் கோவிலில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது. எங்களது மனக்குமுறல்களை மீனாட்சி அம்மனிடம் தெரிவித்துவிட்டு தான் வந்திருக்கிறேன். அம்மன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறாள். சித்திரை திருவிழாவுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு நிச்சயமாக பாவம் வந்து சேரும்.

முத்துமாரி ஜெயக்குமார் (தவிட்டு சந்தை)

சித்திரை திருவிழா தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் நடத்தப்படவில்லை. இதனால் மதுரைக்கு தெய்வக்குற்றம் வந்து சேரும். சித்திரை திருவிழாவின்போது பக்தர்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளிப்பார்கள். அது கிருமி நாசினி. இதனால் பக்தர்களுக்கு நோய் நொடி அண்டாது. எனவே அரசு உடனடியாக சித்திரைத் திருவிழா நடத்த ஆவன செய்ய வேண்டும்.

மதுரையில் மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடியவில்லை, சித்திரை வீதியில் திருவிழா நடத்தலாம். இதற்காக தேவைப்பட்டால் அரசாங்கம் சிறப்பு வழிமுறைகளை வகுத்து சித்திரை திருவிழாவை நடத்த வேண்டும்.

லட்சுமி குருசேகர், (திண்டியூர்)

சித்திரை திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள். சித்திரை திருவிழாவுக்கு தடை காரணமாக அந்நிய செலாவணி பாதிக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைய வாய்ப்புள்ளது.

பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சித்திரை திருவிழாவை பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் அரசாங்கம் நடத்த வேண்டும்.

மதுரையில் உள்ள இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வருகிற 15-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு கொரோனா பரவல் சம்பந்தமாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த வேளையில் கோவில் நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடன் சித்திரை திருவிழாவை நடத்தும் நடவடிக்கையை உறுதியுடன் எடுக்க வேண்டும்.

மேலும் கொடியேற்றத்தை நடத்தி சுவாமி புறப்பாடு மற்றும் அனைத்து நாள் திருவிழாக்களையும் ஆகம விதிப்படி நடத்த வேண்டும். அற நிலையத்துறை கொரோனா விதிகளை காரணம் காட்டி திருவிழாவை ஒட்டுமொத்தமாக நிறுத்த முயற்சி மேற்கொள்ளக்கூடாது. மக்களின் இறை சிந்தனை சமுதாயத்தில் நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அறநிலையத்துறை, அரசு விதிகளுடன் இணைந்து வெற்றிகரமாக செய்து காட்ட வேண்டும்.

“கோவில் விளங்க குடி விளங்கும்” என்ற இறை நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட வேண்டும். இறைவனை வேண்டி பக்தர்கள் தங்களது இன்னல்களை களைந்து அதற்கு கைமாறாக செய்ய உள்ள நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற திருவிழாக்கள், அதைத் தொடர்ந்து நடைபெறும் பூஜைகளை எந்தவித இடையூறுமின்றி நடைபெற வேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் மட்டும் கொரோனா பரவும் என்ற அரசின் வாதம் மக்கள் விரோதமானது. ஆகவே அரசு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அறநிலையத்துறை தைரியமாக சித்திரை திருவிழாவை கொடியேற்றி நடத்த வேண்டும். பக்தர்கள் கோபத்திற்கு அரசு ஆளாவது சமூகத்தில் பெரும் அதிருப்தியை உரு வாக்கும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News