செய்திகள்
போராட்டம்

ராஜபாளையம் அருகே மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்

Published On 2021-11-24 11:07 GMT   |   Update On 2021-11-24 11:07 GMT
ராஜபாளையம் அருகே மழைநீரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் முப்புடாதி அம்மன் கோவில் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது. வீடுகளுக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வடக்கு தேவதானம் ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை மழை பெய்து கொண்டிருக்கும் போதே மழையில் நனைந்தபடி அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சேத்தூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News