செய்திகள்
கேஎஸ் அழகிரி

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் – கேஎஸ் அழகிரி உறுதி

Published On 2021-02-22 13:21 GMT   |   Update On 2021-02-22 13:21 GMT
சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார்.

முதலமைச்சர் நாராயணசாமி நேரடியாக வெளியேறி துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியிருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நேர்மையை புதுச்சேரி மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என கூறியுள்ளார். ஆனால், புதுச்சேரி போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ள முடியாத நிலையை வைத்து பாஜகவின் சர்வாதிகார அணுகு முறையை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

கர்நாடகா, மத்தியபிரதேசம், மணிப்பூர், கோவா என தொடர்ந்து பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக கவிழ்த்ததை சுட்டிக்காட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சாம, பேத, தான, தண்டங்களை கையாண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News