செய்திகள்
பிரதமர் மோடி

வேளாண் சட்டம்: விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் - பிரதமர் மோடி பேச்சு

Published On 2020-11-30 11:13 GMT   |   Update On 2020-11-30 17:38 GMT
வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசி:

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள ராஜாதலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் ஹண்டியா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கான அதிகாரத்தை அளித்து அவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். முன்னதாக சிறு விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைக்கு கொண்டுவருமுடியாமல் இருந்தது. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பது மட்டுமல்லாமல் சட்டரீதியிலான பாதுகாப்பையும் அளிக்கிறது.

இப்போது ஒரு தவறான பிரச்சாரம் பரவி வருகிறது. வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

விவசாயிகள் தங்கள் நலன்களுக்கு எதிர்கால மற்றும் ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

முன்னதாக விவசாய கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் போதும் அதன் பயன்கள் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.

கடன் தள்ளுபடி ஒரு தந்திரம், முன்னதாக விவசாயிகளுக்கு லாபம் மறுக்கப்பட்டது, இடைத்தரகருக்கு லாபம் உறுதி செய்யப்பட்டுவந்தது. விவசாயிகளில் ஒரு பகுதியினர் சந்தேகம் கொண்டிருந்தால், அவர்கள் எப்போதுமே முன்பு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் நாம் இந்த புதிய வேளாண் சட்டங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்த்து அனுபவிக்கப்போகிறோம்.

என்றார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ‘குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News