பெண்கள் உலகம்
சிறந்த வீட்டு பாதுகாப்பு அமைப்புகள்

சிறந்த வீட்டு பாதுகாப்பு அமைப்புகள்

Published On 2022-04-02 02:22 GMT   |   Update On 2022-04-02 02:22 GMT
வீட்டில் ஊடுருவல்களை கண்டறியவும், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து உங்களைக் காப்பாற்றவும் கட்டமைக்கப்பட்டுள்ள சாதனம் என்று இவற்றைச் சொல்லலாம்.
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் அனைவருமே வேலைக்கு செய்பவராகவும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவராகவும் இருக்கிறார்கள்.. இதுபோன்ற சமயங்களில் வயதானவர்கள் வீட்டில் தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.. அதேபோல் வேலைக்குச் செல்லும் பெற்றோராக இருந்தால் குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.. இதுபோன்ற சூழ்நிலைகளில் வீட்டு பாதுகாப்பு கவலைகள் கணிசமாக அதிகரித்து வருவதால் மின்னணு பாதுகாப்பு அமைப்புகளை வீட்டில் நிறுவுவது காலத்தின் தேவையாகிவிட்டது.

சிசிடிவி

மக்கள் பாதுகாப்பைப் பற்றி நினைக்கும் பொழுது மனதில் தோன்றும் ஒரு பிரபலமான வார்த்தை கிளோஸ்ட் சர்க்யூட் டெலிவிஷன் அல்லது சிசிடிவி என்பதாகும்..குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் அனைத்தையும் கண்காணிக்க சிசிடிவி சிறந்த சாதனமாக கருதப்படுகின்றது.இதில் பதிவாகும் காட்சிகளை நாம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தாலும் இருக்கும் இடத்திலிருந்தே நம்முடைய கைப்பேசியின் வாயிலாக வீட்டில் நடப்பவற்றை பார்க்க முடியும்.. சிசிடிவி கேமராக்களை உங்களது தேவைகளை பொறுத்து வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே என எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்..சிசிடிவி கேமராக்களை அவற்றின் வடிவம், இணைப்பு, வீடியோ தரம் மற்றும் வீடியோ பரிமாற்ற முறை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

* வடிவத்தின் அடிப்படையில்- டோம் சிசிடிவி, புல்லட் சிசிடிவி.

* அமைப்பின் அடிப்படையில்- வயர்ட் செக்யூரிட்டி கேமரா, வயர்லெஸ் செக்யூரிட்டி கேமரா.

* வீடியோ தரத்தின் அடிப்படையில்- அனலாக் செக்யூரிட்டி சிஸ்டம், டிஜிட்டல்செக்யூரிட்டி சிஸ்டம்.

* ஸ்டோரேஜ் அடிப்படையில்- ஹார்ட் டிஸ்க், எஸ்டி கார்டு, கிளவுட் ஸ்டோரேஜ்.

ஸ்மார்ட் கதவு

*வீடியோ டோர் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் டோர் பெல்களை நிறுவுவதன் மூலம் நீங்கள் கதவை திறப்பதற்கு முன், உங்கள் கதவுக்கு வெளியே யார் நிற்கிறார்கள் என்பதை அறிய இந்தக் கருவிகள் உதவும்.. இதன் மூலம் நீங்கள் உங்கள் கதவுக்கு வெளியே இருப்பவரின் வருகைக்கான காரணத்தை அவர்களை நேரில் பார்க்காமலேயே அவர்களுடன் பேசி அறிந்துகொள்ளமுடியும்.

* வீடியோ டோர் ஃபோன்- பார்வையாளர் உங்கள் வீட்டு வாசலில் மணியை அடிக்கும் போது, உங்கள் வீட்டிற்குள் அமைந்துள்ள மானிட்டர் யூனிட் மூலம், வெளிப்புற யூனிட்டில் உள்ள இன்பில்ட் கேமரா வழியாக அவர் யார் என்பதை நீங்கள் பார்க்கலாம்.. அதேபோல் ஸ்பீக்கர் யூனிட் மூலம் அந்த நபருடன் பேச விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்.

* ஸ்மார்ட் டோர் பெல்- ஸ்மார்ட் டோர் பெல் மூலம், வந்திருக்கும் நபர் தெரியாதவராக இருந்தால் கதவைத் திறப்பதை தவிர்க்கலாம்..இவை வீடியோ ஸ்ட்ரீமிங், இருவழி ஆடியோ மற்றும் முழுமையான ஹோம் ஆட்டோமேஷன் ஆகியவற்றுடன் முழுவதுமாக பொருத்தப்பட்டுள்ளன.

சென்சார்கள்

வீட்டில் ஊடுருவல்களை கண்டறியவும், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து உங்களைக் காப்பாற்றவும் கட்டமைக்கப்பட்டுள்ள சாதனம் என்று இவற்றைச் சொல்லலாம். சென்சார்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக அலாரம் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கிய சென்சார்களை இப்பொழுது பார்க்கலாம். வீட்டில் திருடப்படும் பொழுது அதைக் கண்டறிந்து எச்சரிக்க பயன்படுகின்றன.

* மோஷன் சென்சார்- இந்த சென்சார்கள் அகச்சிவப்பு ஆற்றலை பயன்படுத்தி வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, ஊடுருவும் போது உங்களை எச்சரிக்கும்.. உங்கள் வீட்டில் யாரோ ஒரு வெளி நபர் இருப்பதை சென்சார் உணரும் நிமிடம், அது உங்கள் கைபேசியில் உங்களுக்கு எச்சரிக்கையை அனுப்ப முடியும்.

* கதவு மற்றும் ஜன்னல் சென்சார்- இந்த சென்சார்கள் கதவு அல்லது ஜன்னலில் பொருத்துவது போன்று ஒன்றும் மற்றொன்று வெளிப்புற சட்டத்தில் பொருத்தும் படி இரண்டு துண்டுகளாக வருகின்றன.. இவற்றிற்கு இடையேயான இணைப்பு உள்ளே நுழையும்போது உடைந்தால், அவை சமிக்ஞை மூலம் அலாரம் பேனலுக்கு அனுப்பப்படும்.

* கிளாஸ் பிரேக்கிங் சென்சார்- ஒரு கொள்ளையன் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயன்றால், இந்த சென்சார்கள் கண்ணாடி உடைப்பதன் தாக்கம், ஒலி மற்றும் சுருதி ஆகியவற்றைக் கேட்டு அலாரத்தை தூண்டும்.

அலாரம் அமைப்புகள்

இவை வெவ்வேறு சென்சார்களின் கலவையாக உருவாக்கப்படுகின்றன, அவை குறிப்பாக உருவாக்கப்பட்ட செயலை கண்டறியும்போது அலாரத்தை தூண்டும்.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வெளிப்புற ஆபத்திலிருந்து பாதுகாக்க உங்கள் வீட்டில் நிறுவக்கூடிய சில அடிப்படை அமைப்புகள் இங்கே:

கம்பி/ கம்பி அல்லாத வீட்டு அலார அமைப்புகள்

கம்பியுடன் கூடிய அலார அமைப்புகள் குறைந்த மின்னழுத்த மின்னோட்டத்தை பயன்படுத்துகின்றன..இது இரண்டு புள்ளிகள் மூலமாக வீட்டின் நுழைவுப் பகுதிக்குப் பாய்கின்றது,மேலும் சுற்றுகளை உடைப்பதால் அலாரம் தூண்டப்படும்.

கம்பி அல்லாத அலார அமைப்புகள் உள்ளமைக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை ட்ரான்ஸ் மிட்டர்களை பயன்படுத்துகின்றன..அங்கு சிக்னல் கட்டுப்பாட்டு பேனலுக்கு அனுப்பப்படுகிறது..அதன் மூலம் அலாரம் செயல்படுத்தப்படுகிறது.

கண்காணிக்கப்பட்ட/ கண்காணிக்கப்படாத அலார அமைப்புகள்- அலாரம் தூண்டப்பட்டால் அவசர சேவைகள் கால் சென்டர் மூலம் நமக்கு அறிவிக்கப்படும்.. அல்லது அலாரம் அடிக்கப்படும் போது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சத்தமாக ஒலியை எழுப்பும்.இதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை நீங்களே எடுக்க வேண்டும்.

வெளிப்புற/ உட்புற சைரன்- அலாரம் சிஸ்டத்துடன் கூடிய சைரன்கள் உட்புறம்,வெளிப்புறம் அல்லது இரு இடங்களிலும் நிறுவப் பட்டிருக்கலாம்.. இதனால் அலாரம் தூண்டப்படும்போது உரத்த சைரனை அக்கம்பக்கத்தினர் கேட்கும்படி ஒலிக்கின்றது..இதன் மூலம் அவர்கள் காவல் துறையை நாடிச் செல்லும் வாய்ப்புள்ளது.

பர்க்லர் அலாரம் சிஸ்டம்- வெவ்வேறு சென்சார்கள் மற்றும் பாதுகாப்பு கேமராக்களின் கலவையானது உங்கள் வீட்டில் அங்கீகரிக்கப்படாத நுழை வைக் கண்டறியும் பர்க்லர் அமைப்பை உருவாக்குகிறது.அலாரம் இயக்கப்படும்போது, உங்களுக்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கை அனுப்பப்படும். இதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற சிறந்த வீட்டு பாதுகாப்பு அமைப்புகளை அமைப்பதன் மூலம் உங்களுடைய குடும்பத்தினர் மட்டுமல்லாது வீடும் மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகின்றது. இனிவரும் காலத்தில் இதுபோன்ற வீட்டு பாதுகாப்பு அமைப்புகள் அனைத்து வீடுகளுக்கும் அவசியமே.
Tags:    

Similar News