செய்திகள்
முரளி விஜய்

விஜய் ஹசாரே டிராபி: குஜராத்தை 78 ரன்னில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது தமிழ்நாடு

Published On 2019-10-16 16:11 GMT   |   Update On 2019-10-16 16:11 GMT
விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது தமிழ்நாடு.
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எலைட் குரூப் ‘சி’ பிரிவில் இரு அணிகளும் தோல்விகளை சந்திக்காமல் வந்தன.

கடைசி லீக்கில் இரு அணிகளும் மோதியதால் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெயரை எடுப்பதில் இரு அணிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

அபிநவ் முகுந்த் 68 பந்தில் 79 ரன்களும், முரளி விஜய் 106 பந்தில் 94 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21.4 ஓவரில் 130 ரன்கள் குவித்தது. அதன்பின் வந்த வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் சேர்த்தார். இதனால் தமிழ்நாடு எளிதான 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தமிழ்நாடு 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்தது.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குஜராத் 196 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று 36 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. குஜராத் 8 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
Tags:    

Similar News