செய்திகள்
கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் இறந்த அவலம்

Published On 2021-06-18 02:03 GMT   |   Update On 2021-06-18 02:03 GMT
கர்நாடகத்தில் 75 நாட்களில் படுக்கை கிடைக்காமலும், வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றதாலும் 1,970 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல் அலையை காட்டிலும் கொரோனா 2-வது அலை தனது தாக்குதலை தீவிரமாக தொடுத்தது. தினசரி பாதிப்பு 50 ஆயிரமாக பதிவானது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிந்தன. இதனால் ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்கவில்லை. இதன் காரணமாக பலர் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் தங்களது உயிரை கொரோனாவுக்கு பறி கொடுத்தனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 75 நாட்களில் படுக்கை கிடைக்காமலும், வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றதாலும் 1,970 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவு பின்வருமாறு:-

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை கொரோனாவுக்கு 20 ஆயிரத்து 472 பேர் இறந்தனர். இதில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை 2,956 பேரும், மே 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 13 ஆயிரத்து 575 பேரும், ஜூன் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3,941 பேரும் இறந்து உள்ளனர்.

இதில் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமலும், வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றவர்களும் அடங்குவர். அந்த வகையில் கர்நாடகத்தில் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமல் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை 171 பேரும், மே 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை 1,326 பேரும், ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 473 பேரும் இறந்து உள்ளனர்.

தலைநகர் பெங்களூருவில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை 1,756 பேரும், மே 1 முதல் 31-ந் தேதி வரை 6,977 பேரும், ஜூன் 1 முதல் 14-ந் தேதி வரை 1,973 பேரும் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்தனர். ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமல் கடந்த ஏப்ரல் மாதம் 150 பேரும், மே மாதம் 1,174 பேரும், ஜூன் 1 முதல் 14-ந் தேதி வரை 423 பேர் என மொத்தம் 1,747 பேர் இறந்து உள்ளனர்.

பெங்களூருவை தவிர்த்து உத்தர கன்னடாவில் 58 பேரும், பெங்களூரு புறநகரில் 39 பேரும், சாம்ராஜ்நகரில் 27 பேரும், ஹாவேரியில் 16 பேரும் படுக்கை கிடைக்காமல் இறந்து உள்ளனர். கொரோனாவுக்கு ஒரு மணி நேரத்தில் 10 பேர் இறந்தால் அதில் ஒருவர் படுக்கை கிடைக்காதது, வீட்டு தனிமையில் சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News