செய்திகள்
உடுமலையில் பொரியை பார்சல் செய்யும் பணி நடைபெறும் காட்சி.

ஆயுத பூஜையை முன்னிட்டு உடுமலை பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2021-10-09 08:27 GMT   |   Update On 2021-10-09 08:27 GMT
உடுமலையில் தயாரிக்கப்படும் பொரியானது இனிப்பு கலந்த சுவையோடு மொறு மொறு தன்மையுடன் இருக்கும்.
உடுமலை:

ஆயுத பூஜை விழாவின்போது படையலில் முக்கியமாக வைக்கப்படுவது பொரி ஆகும். தற்போது ஆயுத பூஜை விழா நெருங்கி வருவதால் உடுமலை பகுதியில் தற்போது பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரியை பல்வேறு மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் பொரியானது இனிப்பு கலந்த சுவையோடு மொறு மொறு தன்மையுடன் இருக்கும். இதனால் திருப்பூர், கோவை, கேரளா, மூணாறு, பாலக்காடு பகுதிகளில் இருந்து பொரியை வாங்குவதற்காக உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம், கொழுமம், ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு  ஏராளமான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் நவீன எந்திரங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் பொரி தயாரிக்கப்பட்டாலும், பாரம்பரிய முறைப்படி சுத்தமான முறையில் இங்கு தயாராகும் உடுமலை பொரிக்கு தனி மவுசு உள்ளது. 

இங்கு தயாரிக்கப்படும் பொரியானது சுத்தமாகவும், எவ்வித ரசாயன கலப்படம் இல்லாமலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொரி தயாரிக்க பயன்படும் மூலதன பொருளான நெல் தரமான நெல்லாக பயன்படுத்தப்படுகிறது. 

பொதுவாக இங்கு வாரந்தோறும் 4 நாட்கள் மட்டும் தான் பொரி தயாரிக்கப்படும். ஆயுத பூஜை உள்ளிட்ட விழாக்காலங்களில் வாரம் முழுவதும் இரவு, பகலாக இங்கு பொரி தயாரிக்கப்படுவது வழக்கம். 

இதுகுறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் பொரியின் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது முழு வீச்சில் பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பொரி தயாரிப்புக்கான மூலதன பொருளான நெல் தரமானதாக தேர்வு செய்யப்பட்டு அதில் சீனி மற்றும் உப்பு கலந்து தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் சரியான தட்ப வெப்ப நிலையில் அதனை காய போட வேண்டும். அவ்வாறு காய போட்டு உலர்த்திய பின்னர் அந்த உலர்ந்த நெல்லை எடுத்து பொரி தயாரிக்கும் எந்திரத்தில் கொட்டி நெருப்பு மூலம் வெந்து பின்னர் பொரியாக எந்திரம் மூலம் வெளியே வருகிறது.

விறகுகள் மூலம் நெருப்பு மூட்டப்படுவதால் அந்த பொரியின் மனமும், சுவையும் மாறாமல் அப்படியே இருக்கும். தற்போது ஆயுத பூஜை விழா நெருங்கி வருவதையொட்டி கடந்த 20 நாட்களாக பொரி தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். 

இதற்கு முன்பு 20 - க்கும் மேற்பட்ட பொரி தயாரிக்கும் பட்டறை இயங்கி வந்த நிலையில் தற்போது போதிய விலை இல்லாமலும், இந்த பணியில் ஈடுபட்டு வந்த அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு வேலைக்கு சென்றதாலும் தற்போது ஒரு சில பட்டறை மட்டுமே இங்கு இயங்கி வருகிறது . 

தற்போது மூட்டை 450 ரூபாய்க்கு விலை போகும் நிலையில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எனவே அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News