செய்திகள்

தேர்தல் கூட்டணி கணக்குகள் தமிழ்நாட்டில் எடுபடாது- டிடிவி தினகரன்

Published On 2018-11-07 07:21 GMT   |   Update On 2018-11-07 07:21 GMT
தேர்தலில் கூட்டணி கணக்குகள் எல்லாம் வடநாடுகளை போல தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் தமிழ்நாட்டு மக்கள் வேறு மாதிரி முடிவு எடுப்பார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran #DMK #Congress #Sasikala #ADMK
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் அக்டோபர் மாதம் 25-ந்தேதி தீர்ப்பு கூறியபோதே நான் அடுத்து தேர்தலை சந்திப்போம் என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தேன்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடைய கருத்துக்களையும் அறிய வேண்டும் என்று விரும்பினேன். அக்டோபர் 26-ந்தேதி அவர்கள் 18 பேரையும் மதுரையில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர்கள் தேர்தலை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார்கள்.

ஆனால் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லலாம். சபாநாயகர் முடிவு தவறு என்று நிரூபிக்கலாம் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம் பத்திரிகையாளர்களிடம் நேரடியாக இதுபற்றி சொல்லுங்கள். அதன்பிறகு உங்களுடைய தொகுதிக்கு நேரடியாக சென்று மக்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை பாருங்கள் என்று கூறினேன்.

அதன்பிறகு நாங்கள் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தோம். ஏற்கனவே இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நாங்கள் அப்பீல் செய்ததால் இந்த அரசு மேலும் 12 மாதம் நீடித்தது.

மீண்டும் நாங்கள் அப்பீல் செய்தால் அவர்களுக்கு கூடுதல் காலம் ஆட்சியில் இருக்க அவகாசம் அளித்தது போல் ஆகிவிடும்.

எங்களை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலோடு 18 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலோ, சட்டசபை தேர்தலோ, இடைத்தேர்தலோ இனி எந்த தேர்தல் வந்தாலும் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள்.

எங்களுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்க்கட்சி. அவர்கள் அரசியல் ரீதியாக எங்களுடைய எதிரி. அவர்கள் தான் எங்களுடைய போட்டியாளர்கள்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாக எல்லோரும் சொல்லலாம். ஆனால் இந்த தேர்தலில் கூட்டணி கணக்குகள் எல்லாம் வடநாடுகளை போல இங்கு எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் வேறு மாதிரி முடிவு எடுப்பார்கள்.

காங்கிரசுடன் கூட்டணி வைப்போம் என்று நான் ஒருபோதும் சொன்னது இல்லை. பத்திரிகையாளர்கள் என்னிடம் உங்களுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் அணுகினார்களா? என்று கேட்டார்கள். அப்படி யாரும் அணுகவில்லை என்று கூறினேன்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அப்படி இருக்க நாங்கள் எப்படி காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியும் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டேன். காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வரட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.


ராகுல்காந்தியை சந்திக்க நான் முயற்சிப்பதாக கூறுவது தவறு. நான் ஒருபோதும் அப்படி முயற்சிக்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபடவில்லை. நான் அவர்களுக்கு நெருக்கமானவன் அல்ல.

ஆனால் சில பிராந்திய கட்சிகள் எங்களோடு கூட்டணி வைக்க விரும்புகின்றன. அவர்களோடு நான் பேசி வருகிறேன். தேசிய கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் அவர்கள் பிராந்திய வி‌ஷயங்களில் அக்கறையாக இருப்பது இல்லை.

2014 தேர்தலில் அ.தி.மு.க. ஜெயலலிதாவால் தான் வெற்றிபெற்றது. ஆனால் இன்று மக்கள் இதில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஒரு புதிய தலைவரும் மதசார்பற்ற கட்சியும் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் எங்களை ஆதரிக்கிறார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் வாக்குகளை பிரிப்பார்களா? என்பது பற்றி என்னால் சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகள். மக்களின் வாக்குறுதிகளை யார் நிறைவேற்றுவார்களோ, அவர்கள் பின்னால் தான் செல்வார்கள்.

அ.தி.மு.க. பிரிவதால் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்வதும் தவறானது. இது ஒரு விளையாட்டு அல்ல. மக்கள் மனதில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அது நடக்கும்.

கட்சி பிரிவினையால் இன்னொரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை சரியானது அல்ல என்பது எனது வலுவான கருத்து. இதை ஆர்.கே. நகர் தேர்தலிலேயே பார்த்தோம். அங்கு தி.மு.க. டெபாசிட் இழந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம்.

அதுமட்டுமல்ல அ.தி.மு.க. ஓட்டு சதவீதம் சரிந்தது. அவர்கள் இனி 5 சதவீத ஓட்டுகளை கூட பெற முடியாது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

ஆர்.கே. நகர் தொகுதியில் பணத்தால் தான் நான் வெற்றி பெற்றதாக அ.தி.மு.க.வினர் தோல்விக்கு பிறகு தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அவர்கள் வலுவான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் போலீஸ் சோதனை இருந்தது. நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. தி.மு.க.வினரும் பணம் கொடுக்கவில்லை.

தி.மு.க. பணம் கொடுத்திருந்தால் டெபாசிட்டையாவது தக்க வைத்து இருப்பார்கள். தேர்தலில் கடைசி நேரம் வரை அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தார்கள். எங்களை பொறுத்தவரை வருகிற தேர்தலில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நாஙகள் இல்லை.

வருகிற தேர்தல்களில் தி.மு.க.வுடனோ அல்லது பாரதிய ஜனதாவுடனோ நாங்கள் ஒதுபோதும் கூட்டணி வைக்கமாட்டோம். அது தற்கொலைக்கு சமமானது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் தனியாக நின்றாலும் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் வெற்றி இலக்கின் ஓட்டு சதவீதம் சற்று குறையலாம். இதற்காக நான் எந்த மறைமுக வேலைகளையும் செய்யும் அரசியல்வாதி அல்ல.

ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி வைக்க விரும்புவதாகவும், அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறுவது பற்றி எனக்கு தெரியாது. என்னை யாரும் இதுவரை அணுகவில்லை.

அப்படியே அவர்கள் அணுகினாலும் நாங்கள் எப்படி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியும். நாங்கள் காங்கிரசுடன் வேண்டுமானால் கூட செல்லலாம், ஆனால் ஒதுபோதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.

அ.தி.மு.க.வுடன் இணைவதற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை. இதுபற்றி நான் சொல்வதானால் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை நாங்கள் செய்வோம்.

எங்கள் கட்சிக்கு எந்த கொள்கையும் இல்லை என்று ஆளும் கட்சி சொல்வது பற்றி நான் என்ன சொல்கிறேன் என்றால், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான் எங்களது ஒரே எண்ணம். இதைவிட வேறு பெரிய கொள்கை எதுவும் இல்லை.

தற்போதைய மாநில அரசு மக்கள் விரோத அரசு. அவர்களுக்கு ஆட்சியில் இருக்க கூடிய தகுதி இல்லை. அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய பெரிய கொள்கை.

நாங்கள் மக்களின் இதயத்தில் அமருவோம். அவர்களுக்காக சேவை செய்வோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றுவோம். இதை தவிர வேறு எந்த பெரிய திட்டங்களும் இல்லை.

வெற்றியோ, தோல்வியோ எங்களை பாதித்துவிடாது. தண்ணீரும், தாமரை இலையும் போல நான் இருப்பேன்.

பொதுச்செயலாளர் சசிகலாவை பொறுத்தவரை அரசியலில் எனக்குள்ள 30 ஆண்டு அனுபவம் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். நான் செயல்படுவதற்கு அவர் முழு அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு தடவை நான் அவரை சந்திக்கும்போது, அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கிறோம். அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி ஆலோசிக்கிறோம். நான் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அவரிடம் கூறினேன். ஆனால் சசிகலா கூறும்போது, இந்த ஆட்கள் தேர்தலை சந்திக்க விரும்பமாட்டார்கள். தள்ளி போடத்தான் பார்ப்பார்கள் என்று கூறினார். அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பொதுச்செயலாளர் பணிகளை செய்வார்.

இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #DMK #Congress #Sasikala #ADMK
Tags:    

Similar News