செய்திகள்
மழையில் இளம்பெண்கள் குடையை பிடித்து சென்றதை காணலாம்.

குமரியில் பரவலாக மழை- பேச்சிப்பாறையில் 6.5 செ.மீ. பதிவு

Published On 2021-05-01 03:37 GMT   |   Update On 2021-05-01 03:37 GMT
கோடை வெயிலில் தவியாய் தவித்து வந்த நாகர்கோவில் நகர மக்களுக்கு நேற்று மதியம் பெய்த மழை மனதுக்கும், உடலுக்கும் இதமாக அமைந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் மின் விசிறிகள் இயங்கினாலும் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. அதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலையா? என்று மக்கள் புலம்பும் அளவுக்கு வெயிலின் வெப்பம் இருந்து வருகிறது.

இடையிடையே மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் குமரி மாவட்ட அணை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை அணை பகுதியில் அதிக பட்சமாக 63.2 மி.மீ. (அதாவது 6.5 செ.மீ.) மழை பதிவாகியது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருஞ்சாணி- 35.4, சிற்றார் 1- 43.6, சிற்றார்2- 37 , புத்தன்அணை- 34.8, சுருளக்கோடு-10.6, களியல்- 2.3, குழித்துறை- 2, பாலமோர்-13.2, அடையாமடை-9 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணிநேரம் வரை நீடித்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல், மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை, வில்லுக்குறி, அழகியமண்டபம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. கோடை வெயிலில் தவியாய் தவித்து வந்த நாகர்கோவில் நகர மக்களுக்கு நேற்று மதியம் பெய்த மழை மனதுக்கும், உடலுக்கும் இதமாக அமைந்தது.
Tags:    

Similar News