செய்திகள்
கட்லு ரவிக்குமார்

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை

Published On 2019-11-05 07:20 GMT   |   Update On 2019-11-05 07:20 GMT
ஊக்க மருந்து உட்கொண்டதால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கட்லு ரவிக்குமாருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

விளையாட்டு வீரர்-வீராங்கணைகளிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (நாடா) போதை மருந்து சோதனை நடத்துவது வழக்கம். சிறுநீர் மற்றும் ரத்த மாதிரி மூலம் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில் ஊக்க மருந்து உட்கொண்டதால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கட்லு ரவிக்குமார் உள்பட 5 பேருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்கும் வீரர் கட்லு ரவிக்குமார் தங்கம் வென்றார். அவர் 64 கிலோ பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதே போல் 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ பிரிவில் அவர் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த நிலையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர் 4 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே போல பளு தூக்கும் வீராங்கணை பூர்ணிமா பாண்டே, பளுதூக்கும் வீரர் குர்மெய்ல்சிங் ஆகியோரும் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

பூர்ணிமா பாண்டே 2016-ம் ஆண்டு ஜூனியர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றவர் ஆவார்.

இதே போல வட்டு எறியும் வீரர் தரம்ராஜ் யாதவ், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீரரான சஞ்ஜித் ஆகியோரும் ஊக்க மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களுக்கும் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதில் தரம்ராஜ் யாதவ் பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் ஆவார்.
Tags:    

Similar News