வழிபாடு
திருவிழாவையொட்டி பக்தர்கள் இறங்குவதற்கு குண்டம் தயார் செய்யும் பணி நடந்த காட்சி.

ஆனைமலையில் இன்று திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா

Published On 2022-03-19 02:55 GMT   |   Update On 2022-03-19 02:55 GMT
ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் இன்று(சனிக்கிழமை) குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருத்தேர் நிலை நிறுத்தலும் நடக்கிறது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி 70 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கும், அதை தொடர்ந்து 10 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த 14-ந் தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், பட்டாபிஷேகமும் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News