செய்திகள்
களக்காடு சிவபுரம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை- குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

Published On 2019-08-07 06:44 GMT   |   Update On 2019-08-07 06:44 GMT
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது.

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் அம்பை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

களக்காடு, திருக்குறுங்குடி மலைப்பகுகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நம்பியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். மேலும் இந்த தண்ணீர் நம்பியாற்றின் மூலம் பாசனம் பெறும் குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.

திருக்குறுங்குடி பெரிய குளத்தில் தண்ணீர் வரத்தால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உட்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் வறண்டு கிடந்த தலையணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதிகளிலும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



பாபநாசம்-65.90, சேர்வலாறு 80.64 , மணிமுத்தாறு 50.20, கடனாநதி 46.60 ராமநதி 60.25, கருப்பாநதி 40.03, குண்டாறு 32.00, வடக்கு பச்சையாறு 2.75, நம்பியாறு 9.44, கொடுமுடியாறு 29.00, அடவிநயினார் 79.00 அடியாகவும் உள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணை பகுதியில் 68 மில்லி மீட்டரும், அடவிநயினார் பகுதியில் 50 மி.மீட்டரும், செங்கோட்டையில் 42 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 38 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 27 மில்லிமீட்டரும், குண்டாறு பகுதியில் 210மில்லி மீட்டரும், ஆய்க்குடி 14.23 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 4.80 மில்லி மீட்டரும், அம்பாசமுத்திரம், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும், சங்கரன்கோவில் பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News