இந்தியா
பெண்

மனைவி மாற்றும் குழுக்களால் தொல்லைக்கு ஆளான பெண்கள் புகார் கொடுக்க மறுப்பு

Published On 2022-01-15 05:57 GMT   |   Update On 2022-01-15 07:26 GMT
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் புகார் அளித்தால் மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை முழுமையாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில் கணவரே தன்னை வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருக்க கூறுவதாகவும், அதற்கு மறுத்தால் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறி இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இக்குழுவினர் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவதும், அதில் மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மற்றும் அவருக்கு துணைபுரிந்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது கேரளா மட்டுமின்றி தமிழகம் மற்றும் கோவா மாநிலத்திலும் இக்குழுவின் உறுப்பினர்கள் இருந்தது தெரியவந்தது.

இவர்கள் இன்ஸ்டாகிரம், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட குழுக்களை தொடங்கியதும், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்திருப்பதும் தெரியவந்தது.

இதில் முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் அடங்குவர். அவர்களை கண்டுபிடிக்க கேரள சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே குழுவில் கணவரின் வற்புறுத்தலால் இணைந்த பெண்கள் பலருக்கும் அவர்கள் விருப்பமின்றி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த பெண்களிடம் இது குறித்து புகார் அளிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறினர். ஆனால் புகாருக்கு ஆளான பெண்கள் பலரும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயந்து போலீசில் புகார் அளிக்க மறுத்து வருகிறார்கள். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது ஒரு பெண் மட்டுமே தைரியமாக புகார் அளித்துள்ளார். இதுபோல பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் புகார் அளித்தால் மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை முழுமையாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதற்கிடையே போலீசாரின் விசாரணை வேகமெடுத்ததை தொடர்ந்து இக்குழுவில் இருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Tags:    

Similar News