இந்தியா
அமித் ஷா

மக்கள் நிராகரித்ததால் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்கின்றனர் - காங். மீது பாஜக கடும் தாக்கு

Published On 2022-01-05 15:55 GMT   |   Update On 2022-01-05 15:55 GMT
பஞ்சாப் மாநிலத்தில் மோடியின் நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கான அனைத்து தந்திரங்களையும் காங்கிரஸ் மேற்கொள்வதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்க இருந்தார். இதற்காக இன்று பஞ்சாப் மாநிலம் பதிண்டா வரை விமானத்தில் பயணித்த மோடி, அங்கிருந்து ஹுசைனிவாலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்குள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருந்தார். ஆனால் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் வாகனம், ஹுசைனிவாலாவை சென்றடைய 30 கி.மீ. தூரம் இருந்தபோது, வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டன. பிரதமரின் கான்வாய் 20 நிமிடங்கள் வரை அங்கேயே நின்றது. 



இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் மோடி மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார். இந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து பஞ்சாப் அரசாங்கத்திடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது.

காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதால், உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் காங்கிரசையும், அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் நாம் இன்று கண்ட காட்சியானது காங்கிரசால் உருவாக்கப்பட்டது என்றும், இது காங்கிரஸ் எவ்வாறு சிந்திக்கிறது மற்றும் செயல்படுகிறது என்பதற்கான டிரெய்லர் என்றும் உள்துறை மந்திரி அமித்  ஷா விமர்சித்தார். மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டுள்ளனர். இந்த செயலுக்காக காங்கிரஸ் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.

பஞ்சாப் மாநிலத்தில் மோடியின் நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கான அனைத்து தந்திரங்களையும் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார். பிரதமர் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார்.



‘பஞ்சாப் மாநிலத்துக்கான ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு பாரத பிரதமரின் வருகை சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது. பஞ்சாபில் திறமையற்ற காங்கிரஸ் அரசியல் நிர்வாகத்தை வரலாறு மன்னிக்காது!’ என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமருக்கான பாதுகாப்பு குளறுபடி, முதல்வர் சன்னியின் அரசாங்கத்திற்கு அவமானம் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சாக் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டதற்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News