செய்திகள்
புதிய வழித்தடத்தில் டவுன் பஸ்சை கனிமொழி எம்.பி. தொடங்கிவைத்து, அதில் பயணம் செய்தபோது எடுத்த படம்.

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது - கனிமொழி

Published On 2021-08-01 01:48 GMT   |   Update On 2021-08-01 01:48 GMT
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார் என கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கனிமொழி கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா பரவல் 2-ம் அலை அதிகரித்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனாலும் அந்த ஆலை குறிப்பிட்ட அளவுக்கு ஆக்சிஜன் தரமுடியாதபோதும், ஓரளவிற்கு உற்பத்தி செய்து தந்துள்ளனர்.

தற்போது ஆக்சிஜன் தேவை இல்லாத நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு உற்பத்தி செய்து வைத்துள்ள ஆக்சிஜனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக குறைந்தளவு மின்சாரம் வழங்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை முழுமையாக வெளியே கொண்டு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நிறுத்தப்படும்.

கேரளாவில் கொரோனாவின் 3-ம் அலை தொடங்கும் அறிகுறி உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.



பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தேவையானால் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜனை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்ய முடியாத சாதனைகளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100 நாட்களுக்குள் செய்து முடித்துள்ளார். இதனை பொறுக்க முடியாத அ.தி.மு.க.வினர் காழ்ப்புணர்ச்சியால் தேவையில்லாத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சாதாரண கட்டணத்தில் 3 புதிய வழித்தடங்களில் டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. புதிய வழித்தடத்தில் பஸ்களை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவரும், ஒரு டவுன் பஸ்சில் ஏறி, பயணிகளுடன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்களும் அந்த பஸ்சில் பயணம் செய்தனர்.

Tags:    

Similar News