லைஃப்ஸ்டைல்
இறுக்கத்தை இறக்குங்கள்...

இறுக்கத்தை இறக்குங்கள்...

Published On 2020-02-04 03:20 GMT   |   Update On 2020-02-04 03:20 GMT
எல்லாம் தொலைந்துபோய்விட்டது இனி எதுவும் இல்லை எனும் போதுதான் புதிதாக முளைத்துவரும் ஏதோவொன்று மறுபடியும் நம்மை நம்பிக்கையோடு வாழச் செய்கிறது.
எப்போதும் ஒரு வெறுமை, எதிலும் பிடிப்பில்லாத தன்மை என்று எதிர்மறையான சிந்தனைகள் நம் உள்ளிருந்து அரிக்கும் கரையான்களாய் நம்மை உண்டு செரித்துச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. மனஅழுத்தம் தின அழுத்தமாகி நம்மைத் தாக்குகிறது. நீறுபூத்த நெருப்பின்மீது யாராவது சேறு பூசமுடியுமா? ஆனால் கவலை வலைகளை எடுத்து நாம் நம்மைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருக்கிறோம். இருக்கப் பிடிக்கவில்லை என்கிறவர்களைத்தான் வெறுப்பும் பிடித்துக்கொள்கிறது. குத்திய முள்ளை எல்லாம் குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் பாதங்களால் எந்தப் பயணத்தையும் நடத்திவிட முடியாது. எல்லாம் தொலைந்துபோய்விட்டது இனி எதுவும் இல்லை எனும் போதுதான் புதிதாக முளைத்துவரும் ஏதோவொன்று மறுபடியும் நம்மை நம்பிக்கையோடு வாழச் செய்கிறது.

மழையில் நனைந்து வரும்போது அன்புடன் துண்டு தந்து தலை துவட்டச்சொல்கிற மனிதநேயமுள்ள மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அருகில் உள்ள எத்தனை மனிதர்கள் நம்மைக் கைவிட்டால் என்ன? தூக்கிவிடத் தூரத்திலிருந்துகூட மனிதர்கள் வரத்தானே செய்கிறார்கள். புயல்வீசும்போதும் காற்றின் வலிமைக் கரங்களையும் மரங்கள் திடமாக எதிர்கொள்ளத்தானே செய்கின்றன. முறிந்தமரம் அதற்குப் பின்னும் தளிர்ப்பதில்லையா? ஏன் அஞ்சவேண்டும்? ஏன் நடுங்க வேண்டும்? தனக்குவமை இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மனக்கவலை இல்லை என்கிறார் வள்ளுவர்.

வாழ்வின் நாட்களில் நடக்க நடக்க நாம் கடந்து கொண்டே இருக்கிறோம். இன்பத்தையும் ஒருசேர! நொந்து நொம்பலம் ஆவதற்கு என்ன இருக்கிறது? எதிலிருந்து தப்பிக்க ஓடுகிறோமோ அதுவே நம்மை விழுங்குகிறது. தோல்வியும் கலக்கமும் நம்மைத் தாண்ட நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? விசில் தாண்டி விட்டுவிட்டால் குக்கர் சோறு கூடக் குழைந்துவிடும். நிரம்பி வழிகிற மகிழ்வலைகளின் நீட்சியாய் நாம் விரும்பிய வாழ்க்கை. மாற்றம் தேடும் வாழ்வில் ஏமாற்றமும் வரத்தானே செய்யும், ஏமாற்றமும் ஒருவகையில் மாற்றம்தான் என்று எடுத்துக் கொள்கிறவர்களுக்குக் கவலை இல்லை, கண்ணீர் இல்லை. புலரும் பொழுதில் மலரும் பூ தான் இந்த வாழ்க்கை!

எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதும், நினைத்த செயல் நடக்காவிட்டால் அதன் தோல்விக்கான பழியை மற்றவர்கள் மீது போடுவதும் மனிதர்களின் இயல்பான குணம். திருவள்ளுவர் இன்பத்துப்பாலில் பைய நகும் என்று பைய எனும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ரெயிலடிக் கடையில், ஊருக்குப் போகும் அவசரத்தில் காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு ஓடிவரும் பயணி “அண்ணாச்சி! சீக்கிரம் ஒரு பிக் சாப்பர் குடுங்க ட்ரெய்னப் பிடிக்கணும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார், கடைக்காரரோ புன்னகையுடன் “ இந்த பிக்சாப்பர்ல பத்துகிலோ அரிசிவேணா பிடிக்கும் ட்ரெய்னெல்லாம் பிடிக்காது” என்று நகைச்சுவையோடு பதில் சொன்னபோது பிக்சாப்பர் வாங்க வந்தவரின் அவசரம் வெடிச் சிரிப்பாய் மாறியது, “அவசரத்தில விட்டுப்பாருங்க அண்டாவுக்குள்ள கூட உங்க கை போகாது! பதறாம பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க ” என்று சொன்ன கடைக்காரரின் நகைச்சுவை இறுக்கமான பதற்ற நிமிடத்தை எவ்வளவு சுலபமாகத் தளர்த்தியது!

ஆனால் நாம் யாரிடமும் பேசாமல் செல்போன் திரைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கிறோமே! எப்போது யார் கவலைப்பட்டாலும் பக்கத்துவீட்டு நண்பரின் குட்டிக் குழந்தை, “மாமா நான் ஒரு விடுகதை போடுகிறேன் பதில் தெரிகிறதா பாருங்கள்!” என்று கேட்டுவிட்டுச் சட்டென்று “எட்டாத உயரத்தில் இனிப்புப் பொட்டலம் அது என்ன?” என ஒரு விடுகதையை எடுத்துவிடும், பதில் தெரியாமல் எல்லோரும் தவித்துக்கொண்டிருப்போம், “சே இது கூடத்தெரியலையா?” சிரித்தபடி “அந்த இனிப்புப் பொட்டலம் தேன் கூடுதான்” என்று நம் சோகச் சிந்தனைகளை சுகமான சிந்தனையாய் மடைமாற்றிவிட்டு ஓடியே போய்விடும். அந்தக் குட்டிக் குழந்தையின் ஓட்டத்தோடு நம் கவலைகளும் சிட்டாகப் பறந்துவிடும். எல்லோரும் கொல்லென்று சிரித்துவிடுவோம்! வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று அதனால்தான் சொன்னார்கள்.

மனக்கவலையை மாற்றும் அருமருந்து சிரிப்புதான். மகிழ்ச்சி அதிகரிக்கும் போது மனக்கவலை மறைந்து போய்விடும். எத்தனை நகைச்சுவைகளை நாம் ரசிக்கிறோம்? “யாரிடம் இருந்து பொங்கல் ரிலீஸ் திரைப்படம் பார்க்க டிக்கெட் வந்ததென்று தெரியவில்லை. இன்று மாலைக் காட்சி” என்றார் மனைவி, “யார் அனுப்பினால் என்ன? நாம் படம் பார்க்கப் போவோம்” என்று கிளம்பினார் கணவர், படம் பார்த்துவிட்டு இரவு இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்.

வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது “இப்போது தெரிந்திருக்குமே யார் உங்களுக்குப் படம் பார்க்க டிக்கெட் அனுப்பினார்” என்று .திருடன் வாசல் கதவில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்தான். டனால் தங்கவேலு நகைச்சுவையிலிருந்து இன்று வடிவேலு நகைச்சுவை வரை எத்தனை ஆயிராமாயிரம் நகைச்சுவைகள் நம் வீட்டுத் தொலைக்காட்சிகளில் வந்து அலைமோதிக்கொண்டிருக்கின்றன! ஏன் பார்த்துச் சிரிக்க மறுக்கிறோம்? இறுகிப்போன கான்கிரிட் பாளமாய் மனத்தை மாற்றிவிட்டுக் கவலை ஆட்டிப் படைக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

அன்று பிறந்த குழந்தையை இழந்த தாய் புத்தரிடம் அழுது புலம்பியபடி “என் குழந்தைக்கு உயிர்தாருங்கள்” என்று மன்றாடினார், அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த புத்தர் “இந்தத் தெருவில் இறப்பே நிகழாத ஒரு வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி கடுகு வாங்கிவா! அப்புறம் நான் சொல்கிறேன்” என்று அனுப்பினார். அலைந்து திரிந்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பிய அத்தாய் “அப்படி ஒருவீடு இந்தத் தெருவில் இல்லை” என்று கண்ணீரோடு வந்து நின்றார். “அம்மா, ஒரு மூச்சுக்கும் இன்னொரு மூச்சுக்கும் இடையில் இருக்கிறது உயிர்.

பிறப்பும் இறப்பும் வாழ்வின் தவிர்க்க முடியாத இருவினைகள், இந்த உண்மையை ஏற்றுக்கொள்” என்று அனுப்பினார். “காயமே வெறும் பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று இறப்பில் கூடக் கலங்காத மனஉறுதி மிக்க மனிதர்கள் இன்றும் இந்தப் பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆற்றுநீரை அணை கட்டி விவசாயத்திற்குப் பயன்படுத்துகிற மாதிரி நம் கவலைத் திவலைகளை நம்பிக்கை எனும் அணை கட்டி மடைமாற்றி நம் வசந்தவாழ்வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர் தனியார் கல்லூரி, திருநெல்வேலி
Tags:    

Similar News