செய்திகள்
இன்ஸ்பெக்டர் வசந்தி

வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் பறித்த வழக்கு: கைதான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 நாள் ஜாமீன்

Published On 2021-09-30 11:32 GMT   |   Update On 2021-09-30 11:32 GMT
வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் பறித்த வழக்கில் கைதான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 நாள் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் ஜாமீன் வழங்க கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், “நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில், நான் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தேன்.

ஜூலை மாதம் கூலித் தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரர் இல்ல நிகழ்வில் (பூப்புனித நீராட்டு விழா) கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி புகழேந்தி, காவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உரிய காவல்துறை பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்லவோ, கைபேசி உபயோகிக்கவோ, மற்ற நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்ள கூடாது.

மனுதாரர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
Tags:    

Similar News