லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் பொய் சொல்வது ஏன் தெரியுமா?

குழந்தைகள் பொய் சொல்வது ஏன் தெரியுமா?

Published On 2020-01-28 06:35 GMT   |   Update On 2020-01-28 06:35 GMT
பெற்றோரின் மனம், குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம் கொள்கிறது. குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.
பெற்றோரின் மனம், குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம் கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.

1. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.

2. குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.

3. சின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ளன. அதாவது, தவறு செய்வதாலேயே நாம் தவறான நபராகிவிட மாட்டோம் என்ற புரிதல் பெரியவர்களிடம் உண்டு. குழந்தைகள் இப்படிக் கருதுவது இல்லை. தவறு செய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அதை ஒப்புக்கொள்வது அவர்கள் தவறானவர்கள் என ஒப்புக்கொள்வதற்குச் சமம்.

4. குழந்தைகளின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அறிவார்த்தமாக அவர்களிடம் பிரசங்கிப்பதைவிடவும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் உரையாடுவதும் கதைகள் போன்றவற்றின் வாயிலாக புரியவைப்பதும் நல்ல பலன் அளிக்கக்கூடிய முயற்சிகள்.

5. தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.

6. குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.

7. குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள். 
Tags:    

Similar News