செய்திகள்
ஹர்மான்.

திருப்பூரில் பரபரப்பு - வீட்டு முன்பு விளையாடிய வடமாநில சிறுவன் கடத்தல்

Published On 2021-10-13 10:30 GMT   |   Update On 2021-10-13 10:30 GMT
தனிப்படையினர் ஹர்மான் விளையாடி கொண்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மன்சூரி. இவரது மனைவி சாஹோ பீபி. இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 பெண், 2 ஆண் என 5 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு விட்டு, திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் மற்ற 3 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

சம்பவத்தன்று வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அவர்களது குழந்தைகள் தமன்னா (வயது 10), சபீனா (8) மற்றும் ஹர்மான் (6) ஆகியோர் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர். 

இந்தநிலையில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஹர்மானை மட்டும் காணவில்லை. அவனை பல்வேறு இடங்களில் தேடினர்.ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. 

இதையடுத்து மன்சூரி 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஹர்மான் எங்கு சென்றான் என்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மர்மநபர்கள் யாராவது அவனை கடத்தி சென்றிருக்கலாமா? அல்லது வழி தெரியாமல் ஹர்மான் எங்காவது சென்றானா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். ஹர்மானை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படையினர் ஹர்மான் விளையாடி கொண்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 

திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் பார்வையிட்டு வருகின்றனர். சிறுவன் மாயமான சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
Tags:    

Similar News