செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கோரி அதிமுக வழக்கு

Published On 2021-09-17 23:33 GMT   |   Update On 2021-09-17 23:33 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி அ.தி.மு.க.சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இந்த 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த எந்த அவசியமும் இல்லை. மொத்தமே 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில்தான் தேர்தல் நடைபெறவுள்ளன. சட்டசபை தேர்தலையே ஒரே கட்டமாக நடத்தியுள்ள நிலையில், இந்த 9 மாவட்டங்களில் 2 கட்டமாக தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சி சார்பில் கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. 2 கட்ட வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என்பது தொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியுடன் தள்ளி வைக்கப்பட்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால் அது நேர்மையாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடக்காது.

இந்த 9 மாவட்டங்களிலும் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கொரோனா விதிகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்தவும் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ம் தேதி மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், உள்ளாட்சி தேர்தலுக்கு வெளிமாநில மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை பணியமர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளார்.

இதற்கு முந்தைய தி.மு.க., ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்தினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்பதால் ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அளித்துள்ள கோரிக்கை மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

Similar News