செய்திகள்
ரெயில்

கொரோனா பயம் காரணமாக தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு இல்லை

Published On 2021-07-18 09:48 GMT   |   Update On 2021-07-18 09:48 GMT
தமிழகத்தில் கொரோனா பயம் காரணமாக பொது மக்கள் வெளியூர் செல்ல விரும்புவதில்லை. இதன் காரணமாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மதுரை:

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவது வழக்கம்.

தமிழகத்தை பொறுத்த வரை தீபாவளிக்கு முன்பதிவு தொடங்கும் நாளில் ரெயில் டிக்கெட் சில மணி நேரங்கள் விற்று தீர்ந்து விடுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளியையொட்டி தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு கவுண்டர்கள் மற்றும் ஆன்லைன் புக்கிங் முன் பதிவு ஆகியவை கடந்த 5-ந் தேதியே தொடங்கியது.

இருந்தபோதிலும் பொது மக்களிடம் கொரோனா பயம் காரணமாக தீபாவளி முன்பதிவிற்கு போதிய வர வேற்பு இல்லை.

சென்னை எழும்பூர்- மதுரை இடையே பாண்டியன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 1448 இருக்கைகள் உள்ளன.

இந்த ரெயிலில் நவம்பர் 1-ந் தேதி 44, நவம்பர் 2-ந் தேதி 435, நவம்பர் 3-ந் தேதி 198 இருக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.

சென்னை-திருநெல்வேலி இடையே நெல்லை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 1592 இருக்கைகள் உள்ளன. ஆனால் நவம்பர் 1-ந் தேதி 14 டிக்கெட்டுகள், நவம்பர் 2-ந் தேதி 396 டிக்கெட்டுகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மொத்தம் 30 சதவீத இருக்கைகளே நிரம்பி உள்ளன.

மதுரை- சென்னை இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கு முன்பதிவு தள்ளாடுகிறது. இந்த நிலையில் மேலும் சிறப்பு ரெயில்களை எப்படி இயக்குவது? என்று தெரியாமல் தென்னக ரெயில்வே தவித்து வருகிறது.

இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

தமிழகத்தில் கொரோனா பயம் காரணமாக பொது மக்கள் வெளியூர் செல்ல விரும்புவதில்லை. இதன் காரணமாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீபாவளிக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன.

எனவே சிறப்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு சீக்கிரம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களின் எதிர் பார்ப்பை கருத்தில்கொண்டு தீபாவளிக்கு மேலும் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News