செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அசாம், உத்தரபிரதேசத்தை போல தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுமா?

Published On 2021-04-21 08:09 GMT   |   Update On 2021-04-21 08:09 GMT
அசாம் மாநிலத்திலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும் அந்த மாநிலத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனாலும் அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்படவில்லை. அந்தந்த மாநில அரசுகள் இது சம்பந்தமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே பல மாநில அரசுகள் குறைந்த விலையில் மருந்துகளை கொள்முதல் செய்து இலவசமாக மக்களுக்கு வழங்க முயற்சித்து வருகின்றன.


உத்தரபிரதேசமும், அசாமும் தங்கள் மாநிலங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளன. இதேபோல பல மாநிலங்களும் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுமா என்பது தெரியவில்லை. தற்போது தேர்தல் நடந்து நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இது சம்பந்தமாக மாநில அரசு முடிவு எடுப்பதில் சிக்கல் உள்ளது.

எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வந்தபிறகுதான் முடிவு எடுக்கும் நிலை உள்ளது. மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றே யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.

புதிய ஆட்சி அமைந்தபிறகு இதற்கான அறிவிப்புகள் வரலாம். ஒருவேளை தேர்தல் கமி‌ஷன் அனுமதித்தால், முன்கூட்டியே முடிவு எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

அசாம் மாநிலத்திலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும் அந்த மாநிலத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News