செய்திகள்
தீப்பெட்டி கழிவுகள் ஏற்றிய லாரியில் எரிந்த தீயை அணைக்கும் பணி நடந்ததை படத்தில் காணலாம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை கழிவுகள் ஏற்றிய மினிலாரி தீப்பிடித்ததால் பரபரப்பு

Published On 2021-06-11 17:43 GMT   |   Update On 2021-06-11 17:43 GMT
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை கழிவுகள் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி தொழிற் பேட்டையில் தீப்பெட்டி தொழிற் சாலைகள், தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை என ஏராளமான தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒரு தீப்பெட்டி தொழிற் சாலையில் நேற்று மினி லாரியில் தீப்பெட்டி கழிவுகளை ஏற்றினர். அதிகளவு ஏற்றிய அந்த லாரி, ஆலையை விட்டு வெளியே வந்தபோது, மேலே சென்ற மின்ஒயருடன் தீப்பெட்டி கழிவுகள் உரசியதால் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து லாரியை சில அடி தூரத்துக்கு நகர்த்திய ஓட்டுநர் அங்கேயே நிறுத்தினர்.

உடனடியாக தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பிடித்து எரிந்ததால், அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த வழியாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டரை நிறுத்தி, அதிலிருந்து குழாய் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் வீரர்கள் அங்கு வந்து, மினி லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில், மினி லாரி சேதமடைந்தது. இந்த கழிவுகள் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பேப்பர் மில்லுக்கு கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தால் பெரியளவு சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து கிழக்கு போலீசார், லாரி டிரைவர் கார்த்திக் (வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News