செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம், மதமாற்ற தடைச்சட்டம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-28 07:46 GMT   |   Update On 2020-11-28 07:46 GMT
டெல்லியில் விவசாயிகள் போராட்டம், உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச்சட்டம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலையில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். தடுப்பூசி பரிசோதனையின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். 

# டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்த புராரி மைதானத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். 

# தடையை மீறி பேரணி சென்ற விவசாயிகள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தபோது, இளம் விவசாயி நவ்தீப் சிங், தனது உயிரை பணயம் வைத்து, தண்ணீர் பீரங்கி வாகனம் மீது ஏறி தண்ணீரை நிறுத்தினார். போராட்ட ஹீரோவாக பாராட்டப்படும் அவரது இந்த செயலுக்காக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

# உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93.51 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 41,322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 87.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 1.36 லட்சம் பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 4.54 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

# ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

# டிசம்பர் 15ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

# தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

# திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வீடுகளிலிருந்தே நேரடியாக காணலாம்.

# அபுதாபி மினா ஜாயித் பகுதியில் உள்ள ‘மீனா பிளாசா’ என்ற வளாகத்தில் கட்டப்பட்டு வந்த 4 கட்டிடங்கள் வெடிவைத்து 10 வினாடிகளில் தகர்க்கப்பட்டது.

# ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்  போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியதால் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்,  பார்ட்-டைம் பந்து வீச்சாளர்களிடம் சில ஓவர்களை பெற வேண்டியது அவசியம் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

# விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடும் உரிமையை நெட்பிளிக்ஸ் என்ற ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. பொங்கல் அன்று படத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News