செய்திகள்
கேஎஸ் அழகிரி

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பணபலத்தை எதிர்த்து மகத்தான வெற்றி பெறுவோம்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-10-03 09:59 GMT   |   Update On 2019-10-03 10:45 GMT
அ.தி.மு.க.வின் பணபலத்தை எதிர்த்து இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று நெல்லையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நெல்லை:

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் நினைவு நாளான நேற்று அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இது கண்டிக்கத்தக்கது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகுல் காந்தி, பிரியங்கா, சோனியா காந்தி போன்றவர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருவதில்லை. ஆனாலும் அவர்களை பிரசாரத்திற்காக அழைத்துள்ளோம். இடைத்தேர்தலில் எங்களது பிரதான நோக்கம் அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும்.

மத்திய அரசின் ஜாதி, மத, மொழி வாரியான பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். நாங்குநேரி தொகுதி மக்களுக்கு அயராது பாடுபட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் போய் விட்டது. தூத்துக்குடியில் ஒரு மாதத்தில் 19 கொலைகள், திருச்சியில் நகை கடையை உடைத்து ரூ.13 கோடி நகை கொள்ளை. இதுபோல தினமும் வரும் பிரச்சனைகளை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாங்கள் ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை எதிர்த்து சத்தியம், லட்சியம், கொள்கை ரீதியில் மக்களை நம்புகிறோம்.


கூட்டணி கட்சிகளோடு இணைந்து வாக்கு கேட்டு வருகிறோம். அ.தி.மு.க.வின் பணபலத்தை எதிர்த்து இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். வேட்பாளர் ரூபி மனோகரன் வெளிநபர் அல்ல. எங்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்.

ஜெயலலிதா சொந்த தொகுதியில் போட்டியிட்டதில்லை. இதுபோல பல தலைவர்கள் வேறு இடங்களில் போட்டியிடுவது வழக்கம். காங்கிரசில் எந்த உட்கட்சி பிரச்சனையும் இல்லை. இது ஒரு பெரிய ஜனநாயக கட்சி. அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.

இந்த ஆட்சி மாற வேண்டும் என்று தான் தமிழக, புதுச்சேரி மக்கள் பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களை தந்தார்கள். உள்ளாட்சி தேர்தலை கண்டு ஆளும் கட்சி அச்சம் கொள்கிறது. தமிழகத்தில் பாடத்திட்டம் வேறு, தேர்வு முறை வேறு. எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தேசிய செயலாளர் சஞ்சய்தத், நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர்கள் எஸ்கேஎம்.சிவக்குமார், சங்கரபாண்டியன், வக்கீல் காமராஜ், வி.பி.துரை மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News