ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் மலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்

Published On 2020-11-30 06:47 GMT   |   Update On 2020-11-30 06:47 GMT
திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம் ஜொலித்தது. அதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 21-ந் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி 3½ அடி உயரமும், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, மெருகு ஏற்றப்பட்டது. 350 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணியிலான திரி தயாரிக்கப்பட்டு அதை நெய்யில் பதப்படுத்தப்பட்டு தயார் படுத்தப்பட்டது. மேலும் 5 கிலோ கற்பூரம் ஆகிய தீப உபகரணங்கள் தயாராக இருந்தது. இந்தநிலையில் கோவிலில் இருந்து மலையிலுள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்திற்கு தாமிர கொப்பரை உள்ளிட்ட தீப உபகரணங்கள் எடுத்து செல்லப்பட்டன.

பின்னர் தாமிர கொப்பரையில் நெய், காடா துணியிலான திரி ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிலுக்குள், மலையிலுமாக கோவில் சிவாச்சாரியார்கள் ஒரே நேரத்தில் விக்னேஸ்வர பூஜை மற்றும் தீப பூஜை செய்தனர். இதனையடுத்து கோவிலுக்குள் பெரிய ஆலயமணி அடித்தது. அதன் ஒலி கேட்டு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்பட்டது. இதே நேரத்தில் சமவேளையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அது 10 அடி உயரத்திற்கு சுடர்விட்டு எரிந்து ஜெக ஜொலித்தது. அவை கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டதும் நகர் முழுவதும் வீடு கடை மற்றும் அலுவலகங்களில் அகல் விளக்குகள் ஏற்றினார்கள். இதனால் நகர் வீதிகள் முழுவதும் ஒளி வெள்ளமாக காட்சி அளித்தது. மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வாணவேடிக்கை விடப்பட்டது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலை ஏற தடைவிதிக்கப்பட்ட போதிலும் நகர் பகுதியில் இருந்து பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி தீப தரிசனம் செய்தனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று 30-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை தினமான நேற்று தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் நேற்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து தடையை மீறி கிரிவலம் வந்தனர். மேலும் அவர்கள் கோவில் வாசல் முதல் அவனியாபுரம் ரோடு சந்திப்பு வரை பெரிய ரதவீதியில் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோவில் வாசல் முன்பு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காதபடி காணப்பட்டது.
Tags:    

Similar News