உள்ளூர் செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்து விட்டு வந்தபோது எடுத்த படம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்

Published On 2021-12-16 03:54 GMT   |   Update On 2021-12-16 05:38 GMT
தமிழக கவர்னரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோவிலில் 4 மாசி வீதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணமாக தென்மாவட்டங்களுக்கு வந்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் நேற்று மதியம் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த கவர்னரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு தமிழக கவர்னருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு நடந்தது.

அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவ- மாணவிகளை கவர்னர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கல்வி மேம்பாடு தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

பின்பு இரவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இன்று அதிகாலை 5 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு மனைவி லட்சுமியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை 7 மணி அளவில் வந்தார். அப்போது அவரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு தரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். அங்கு சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனை மனம் உருக வழிபட்டார்.

அதன் பிறகு கோவிலை சுற்றி பக்தி சிரத்தையுடன் வலம் வந்தார். அப்போது அவருக்கு கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இதனை கவர்னர் நிதானமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரை குளத்தை பார்வையிட்ட கவர்னர், 4 கோவில் கோபுரங்களையும் மெய் சிலிர்ப்புடன் கை கூப்பி வணங்கினார். பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழக கவர்னரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோவிலில் 4 மாசி வீதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவியுடன் கூடிய மோப்பநாய் சோதனையும் நடத்தப்பட்டது.

காமராஜர் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Tags:    

Similar News