செய்திகள்

ஜூலை 1-ந்தேதி முதல் ஆதார் அட்டையில் முக அடையாள முறை

Published On 2018-03-26 05:56 GMT   |   Update On 2018-03-26 05:56 GMT
ஆதாரில் ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் ஆதார் அட்டை செயல்பாடு தற்போது நடைமுறையில் உள்ளது. ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவை அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வயது முதிர்வு, கடின உழைப்பு, கைரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை எடுக்கும் போதும், பிறபயன்பாட்டின் போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அடையாளம் எடுக்கப்படும். மற்றபடி சாதாரண நடை முறையே தொடரும்.

முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது தனி நபர்களுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு அடையாளம் உறுதிப்படுத்துவதற்கு கூடுதலாக ஒரு வழிமுறையே வழங்குகிறது. அதே வேளையில் முகப்பதிவு அடையாள வழிமுறையை கருவிழிப்படலம், கைரேகை அல்லது ஒரு முறை கடவுஎண் (ஓ.டி.பி),ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்தே மேற்கொள்ள முடியும். இந்த புதிய சேவை பயோமெட்ரிக் சாதனத்தை வழங்கும் நிறுவனங்களுடன் தனித்துவ அடையாள ஆணையம் இணைந்து செயல்பட்டுள்ளது. இது வரை 119 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் சரா சரியாக 4 கோடி ஆதார் அடையாளமாக சரிபார்ப்புகள் நடைபெறுகின்றன.

அரசு உதவித்தொகை, மானியவிலை சமையல் கியாஸ், விவசாய கடன்கள், ஓய்வூதிய திட்டங்கள் என அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது.

Tags:    

Similar News