ஆன்மிகம்
மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருப்பதி கோவில்.

பிரம்மோற்சவ விழா கோலாகலம்: மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருப்பதி

Published On 2021-10-06 07:52 GMT   |   Update On 2021-10-06 07:52 GMT
பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் நடந்து வர ஏதுவாக அலிபிரி நடைபாதையை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கொண்டு கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சேனாதிபதி விழா ஏற்பாடுகளை பார்வையிடும் அங்குரார்ப்பணம் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து நாளை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது.

11-ந்தேதி நடைபெறும் கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி சித்தூர் கலெக்டர் ஹரிநாராயணன் திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பாலநாயுடு மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அலிபிரியில் இருந்து திருமலை வரை உள்ள நடைபாதை கடந்த ஓரு ஆண்டாக சீரமைக்கும் பணி நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் நடந்து வர ஏதுவாக அலிபிரி நடைபாதையை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.

15-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுவதால் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் நேற்று 20,475 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 10,370 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
Tags:    

Similar News