செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

புகார் தொடர்பாக என்னை விசாரணைக்கு இதுவரை அழைக்கவில்லை- துணைவேந்தர் சூரப்பா

Published On 2020-12-07 02:42 GMT   |   Update On 2020-12-07 02:42 GMT
புகார் தொடர்பாக இதுவரை விசாரணைக்கு என்னை அழைக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசின் உயர்கல்வித் துறை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து இருக்கிறது. அவரும் விசாரணையை தொடங்கி, அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார். இதுதொடர்பாக சூரப்பா, ‘நான் ஒரு பைசா கூட லஞ்சமாக பெற்றது கிடையாது, எதற்கும் நான் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அதிகாரத்துக்கு முன் நெளிந்து குனியாதவர்; வளைந்து கொடுக்காதவர் என்றும், நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்கமாட்டேன்’ என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசியிருந்த வீடியோ குறித்து, அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

நான் ஒரு நேர்மையானவன் என்று என்னை புரிந்துகொண்டு கமல்ஹாசன் பேசியது மகிழ்ச்சி. என்னை பற்றி யார் வேண்டுமானாலும் எந்தவிதமான கருத்துகளையும் சொல்லலாம். ஆனால் நான் என்னுடைய வேலையை மிகுந்த ஈர்ப்புடன் செய்து வருகிறேன். நான் எந்த இடங்களில் வேலை செய்தாலும் அதே மனதுடன் தான் பணிபுரிந்து வருகிறேன். அந்தவகையில் நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நல்ல பெயர் தான் கிடைத்தது. தமிழகத்தில் தான் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கின்றனர். புகார் தொடர்பாக இதுவரை விசாரணைக்கு என்னை அழைக்கவில்லை. எனக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு வேண்டும் என்று நான் கேட்டதும் இல்லை. இதுபற்றி கவர்னரை சந்தித்து நான் எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News