ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் ராஜகோபுரம் வழியாக சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள்.

பழனியில் முருகப்பெருமானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

Published On 2020-09-02 06:49 GMT   |   Update On 2020-09-02 06:49 GMT
பழனியில், முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், சமூக இடைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக தரிசன வழிகளில் சதுர வடிவில் கட்டங்கள் வரையப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையொட்டி, நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்களும் திறக்கப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி முருகப்பெருமானை தரிசிப்பதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள், சமூக இடைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக தரிசன வழிகளில் சதுர வடிவில் கட்டங்கள் வரையப்பட்டிருந்தன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக தானியங்கி கிருமிநாசினி வழங்கும் எந்திரமும் படிப்பாதையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கிருமிநாசினியை பெற்று கைகளை சுத்தப்படுத்திய பிறகு, ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையை கோவில் ஊழியர்கள் நடத்தினர். அதன் பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதையை மட்டுமே பயன்படுத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகியவற்றின் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சாமி தரிசனத்துக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 50 பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் செய்தனர்

நேற்று முதல் நாள் என்பதால் உள்ளூர் பக்தர்கள் முன்பதிவு செய்யாவிட்டாலும் அனுமதிக்கப்பட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் முருகப்பெருமானை தரிசித்த மகிழ்ச்சியில் பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்தில் கோஷமிட்டு வழிபட்டனர். சாமி தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு விபூதி பாக்கெட் பிரசாதமாக வழங் கப்பட்டது. மேலும் தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட் களை எடுத்துவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் பக்தர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தரிசன ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து நேற்று பழனி முருகன் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில் முதல் நாளான நேற்று ஒரே நாளில் 4,904 பேர் சாமி தரிசனத்துக்காக மலைக்கோவிலுக்கு வந்தனர்.

இதில் 2 பெண்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்ததில் அவர்களின் உடல் வெப்ப நிலை குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சாமி தரிசனம் செய்ய கோவில் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் அவர்களை பழனி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளும்படி கூறி ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 4,902 பேர் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News