செய்திகள்
கமல்ஹாசன்

கமலின் நேர்மையை கண்டு எடப்பாடி பயப்படுகிறார்- மக்கள் நீதி மய்யம் பதிலடி

Published On 2019-11-13 04:57 GMT   |   Update On 2019-11-13 04:57 GMT
கமல்ஹாசனின் நேர்மையை கண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை:

ஓமலூரில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், “தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் பற்றி முதலில் கமல் சொன்னார், இப்போது ரஜினியும் சொல்லியிருக்கிறாரே?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி “வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

கமல் மிகப்பெரிய தலைவர்தானே. ஏன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை? நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது? தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் அரசியலுக்கு வர விரும்பும் நடிகர்களுக்கும் ஏற்படும்” என்று கடுமையாக விமர்சித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கமல்ஹாசன் நேரடியாக பதில் அளிக்காத நிலையில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியல் என்பது அனைத்து மக்களுக்கும் நல்லதை, நேர்மையாக செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகன்களின் உரிமை, கடமை மற்றும் பொறுப்பு. அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனை போன்ற நேர்மையானவர்களை கண்டு பயப்படுவது நியாயம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரது பதிவில், ‘கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி’ என்று ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு, “நமக்கு வேலை நிறைய இருக்கிறது. இவர்களுக்கு பதில் சொல்வது கால விரயம். இணைவோம்! எழுவோம். நாளை நமதே! நிச்சயம் நமதே!!” என்றும் பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தனது பதிவில், “உங்கள் அரசியல் அவருக்கு தெரியாது தான் முதல் அமைச்சர் எடப்பாடியார் அவர்களே. அவர் அரசியல் உங்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அது நேர்மை அரசியல்” என்று விமர்சித்துள்ளார்.
Tags:    

Similar News