செய்திகள்
கலங்கரை விளக்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், அதன் மாதிரி படத்தையும் காணலாம்

தனுஷ்கோடியில் விறுவிறுப்பு அடைந்த கலங்கரை விளக்கம் பணிகள்

Published On 2020-09-29 03:56 GMT   |   Update On 2020-09-29 03:56 GMT
தனுஷ்கோடியில் தற்போது கலங்கரை விளக்கம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள புயலால் அழிந்து போன தனுஷ்கோடியில் கம்பிப்பாடு கடற்கரையில் ரூ.8 கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டும் பணியானது கடந்த பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் தொடங்கி, தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 4 மாதத்துக்கு மேலாகவே நடைபெற்று வரும் இந்த கலங்கரை விளக்க பணியில் இதுவரையிலும் 15 மீட்டர் உயரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதுடன், இரவு-பகலாக வேலை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி கலங்கரை விளக்கத்துக்கான உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இன்னும் 6 மாதத்தில் கலங்கரை விளக்க பணிகள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உப்புக்காற்றால் இந்த கலங்கரை விளக்கம் பாதிப்பு அடையாமல் இருக்க அதிக உறுதி தன்மை கொண்ட கம்பிகளும், ரசாயன கலவைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த கலங்கரை விளக்கத்துக்கு மேலே சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் ‘லிப்ட்’ வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 2 ஜெனரேட்டர்கள் வைக்கப்பட உள்ளன. கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில் அமைக்கப்படும் மின்விளக்கின் வெளிச்சமானது, 18 கடல் மைல் தூரம் வரையிலும் தெரியும். மேலும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் ரேடார் கருவிகளும் பொருத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News