செய்திகள்
அனா ஹரம்ஸ்சோவா

'பாதுகாப்பு படையின் அழகி' பட்டம் வென்றவர் பாதுகாப்புபடையில் இருந்து டிஸ்மிஸ் - பொறாமையால் நடவடிக்கை...

Published On 2020-12-12 16:38 GMT   |   Update On 2020-12-12 16:38 GMT
ரஷிய பாதுகாப்பு படையின் அழகி என்ற பட்டம் வென்ற பெண் பாதுகாப்புபடையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தனது அழகை கண்டு சக பெண்கள் பொறாமைபட்டே இந்த நடவடிக்கை எடுத்ததாக அப்பெண் குற்றம்சுமத்தியுள்ளார்.
மாஸ்கோ:

ரஷிய ராணுவத்தில் தேசிய பாதுகாப்பு படை என்ற பிரிவு உள்ளது. இது ரஷியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் படையாகும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ரஷிய தேசிய பாதுகாப்பு படைப்பிரிவில் அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றிவந்த 32 வயதான அனா ஹரம்ஸ்சோவா என்ற பெண் வென்றார். 

அவருக்கு தேசிய பாதுகாப்பு படைப்பிரிவின் அழகி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1,000-த்திற்கும் அதிகமான பெண் போட்டியாளர்கள் பங்கேற்ற அந்த அழகிப்போட்டியில் அனா ஹரம்ஸ்சோவா முதலிடம் பிடித்து
பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், அனா தான் பணிபுரியும் பாதுகாப்புப்படை பிரிவின் அலுவலக வளாகத்தில் வைத்து துப்பாக்கியை வைத்து பயிற்சி எடுப்பது போன்ற வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். மேலும், தான் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபடுவதுபோன்ற புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பாதுகாப்புப்படை பிரிவில் இருந்து அனா ஹர்ம்ஸ்சோவா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 



பாதுகாப்பு படையின் அலுவலக பகுதியை வீடியோவாக சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக அனா டிஸ்மிஸ் செய்யப்படுவதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தேசிய பாதுகாப்பு படையின் அழகி பட்டத்தை தான் பெற்றதால் சக பெண் பாதுகாப்பு படையினரும், உயர் பொறுப்புகளில் உள்ள பெண் அதிகாரிகளும் தன் மீது மிகுந்த பொறாமையில் இருந்ததாகவும், அந்த பொறாமையாலேயே அவர்கள் தன்னை வேண்டுமென்றே பாதுகாப்பு படையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளதாகவும் அனா ஹர்ம்ஸ்சோவா குற்றம்சுமத்தியுள்ளார்.

மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் அனா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News