இந்தியா
2 சிறுத்தை குட்டிகள்

பாழடைந்த வீட்டில் தனியாக பதுங்கி இருந்த 2 சிறுத்தை குட்டிகள்

Published On 2022-01-11 06:18 GMT   |   Update On 2022-01-11 06:18 GMT
கேரளாவில் பாழடைந்த வீட்டில் தனியாக பதுங்கி இருந்த 2 சிறுத்தை குட்டிகளை மீட்ட அதிகாரிகள் வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இவற்றை கேரள அரசின் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் கண்காணித்து பராமரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாலக்காடு அருகே அகத்தேதாரா வனப்பகுதியில் பாழடைந்த நிலையில் உள்ள வீட்டை பொன்னன் என்பவர் பராமரித்து வருகிறார்.

சம்பவத்தன்று பொன்னன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து வினோதமான சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் மறைவான இடத்தில் 2 சிறுத்தை குட்டிகள் பதுங்கி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்ளே சென்று சிறுத்தை குட்டிகளை பார்த்து அவற்றை மீட்டனர். பின்னர் சிறுத்தை குட்டிகளுக்கு உணவு அளித்தனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் 2 சிறுத்தை குட்டிகளையும் பரிசோதித்தனர். இதில் அவை நல்ல ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாலக்காடு கோட்ட வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸ் குர்ரா கூறுகையில்,

2 சிறுத்தை குட்டிகள் பிறந்து 10 நாட்களுக்குள்தான் இருக்கும். இன்னும் கண்கள் முழுமையாக திறக்கவில்லை. குட்டிகளை தேடி தாய் சிறுத்தை வரும் என்று கருதுகிறோம், வராவிட்டால் நாங்களே கொண்டு 2 குட்டிகளையும் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டு விடுவோம் என்றார்.

இப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்தப் பகுதியில் காட்டுவிலங்குகள் அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்து விடுகின்றன. எனவே சிறுத்தைகளை கூண்டு அல்லது பொறி வைத்து பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



Tags:    

Similar News