செய்திகள்
சோனியாகாந்தி- சரத்பவார்

சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்

Published On 2019-11-12 06:46 GMT   |   Update On 2019-11-12 06:46 GMT
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் சரத்பவார் உறுதியான தகவலை வெளியிடாததால் குழப்பம் நீடிக்கிறது.
  • மகாராஷ்டிராவில் ஓட்டு எண்ணிக்கை நடந்து 19 நாட்கள் ஆகி விட்டது.
  •  சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்.
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கவர்னர் அவகாசம் வழங்கி உள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா- சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இன்னொரு கூட்டணியாகவும் நேருக்கு நேர் மோதின.

மொத்தம் உள்ள 288 இடங்களில் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் (பா.ஜனதா-105, சிவசேனா-56) கிடைத்தன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 98 இடங்கள் (தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44) கிடைத்தன.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் சிவசேனா தனக்கே முதல்- மந்திரி பதவி வேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்தியது. இதனால் பாரதிய ஜனதா-சிவசேனா பிளவு ஏற்பட்டு அந்த கூட்டணி உடைந்துள்ளது.

பாரதிய ஜனதாவை கை கழுவிய சிவசேனா தலைவர்கள் அடுத்த கட்ட மாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளுக்கும் 154 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால் சிவசேனா தலைவர்கள் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி (சனிக்கிழமை) ஆட்சி அமைக்க வரும்படி பாரதிய ஜனதா கட்சிக்கு மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோசியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முன்வரவில்லை. தங்களிடம் போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் ஆட்சி அமைக்க இயலாது என்று தெரிவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து 2-வது பெரிய கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிக்கு நேற்று முன்தினம் கவர்னர் அழைப்பு விடுத்தார். திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்குள் ஆட்சி அமையுங்கள் என்று அவர் சிவசேனா கட்சிக்கு அவகாசம் அளித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற்று சிவசேனா எளிதில் ஆட்சி அமைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த அடுத்தடுத்த திருப்பங்கள் மகாராஷ்டிரா அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.

சிவசேனாவை ஆதரிப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று காலை மற்றும் மாலை என இரண்டு தடவை மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டங்களில் சிவசேனாவை ஆதரிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரில் 40 பேர் சிவசேனாவை ஆதரிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அவர்களை ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக்கெலாட் சந்தித்து பேசினார்.

அவர்களிடம் கெலாட் புதிய ஆட்சி குறித்து கருத்துக்களை கேட்டு அறிந்தார். அப்போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுனகார்கே, கே.சி. வேணுகோபால் உள்பட பல தலைவர்கள் சிவசேனாவுடன் கைகோர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிவசேனாவுடன் சேரவே கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். சிவசேனாவுடன் சேர்ந்தால் மகாராஷ்டிராவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சிவசேனாவுடன் நட்பு ஏற்படுத்துவதற்கு சோனியா மற்றும் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிக மிக தயங்கிய நிலையில் உள்ளனர். இதனால் நேற்று சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எந்த ஆதரவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே எப்படியாவது ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியிலும், மும்பையிலும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்தை மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்த அவர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கடிதம் கேட்டுக்கொண்டார்.

நேற்று மாலை அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசினார். ஆனால் சரத்பவார் தனது கட்சியால் தன்னிச்சையாக முடிவு எடுக்க இயலாது. காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் தனது முடிவும் அமையும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே நேற்று மாலை 2 தடவை தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பேசினார். 2-வது தடவை அவர் சுமார் 7 நிமிடங்கள் சோனியாவுடன் பேசி ஆதரவு தருமாறு கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோளை சோனியா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.


சிவசேனாவின் சில கொள்கைகள் வி‌ஷயத்தில் தெளிவான நிலையை தெரிந்துக் கொள்ள சோனியா விரும்பினார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்தும் அவர் எழுத்துப்பூர்வமான உடன்படிக்கையை செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த 2 வி‌ஷயங்களால் நேற்று சிவசேனாவை உடனடியாக காங்கிரசால் ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் கோசியாரி நேற்று மாலை சிவசேனா தலைவர்களை அழைத்து ஆட்சி அமைக்க முடியுமா? முடியாதா? என்று விளக்கம் கேட்டார். அதற்கு ஆதித்திய தாக்கரே, “காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எங்களை ஆதரிக்கின்றன” என்று தெரிவித்தார். ஆனால் அவரால் பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கொடுக்க இயலவில்லை.

இதையடுத்து சிவசேனாவுக்கு வழங்கிய அவகாசம் முடிந்து விட்டதாக அறிவித்த கவர்னர் அடுத்து மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரஸ் கட்சி தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கவர்னர் அவகாசம் வழங்கி உள்ளார்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக நேற்று போல இன்றும் டெல்லியிலும், மும்பையிலும் பரபரப்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா தனது வீட்டில் மூத்த தலைவர்களை அழைத்து மூன்றாவது முறையாக ஆலோசனை நடத்தினார். அப்போது மாற்று அரசு அமைய ஆதரவு கொடுப்பது பற்றி தீவிர விவாதம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மும்பையில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்து புதிய அரசை உருவாக்க மூன்று கட்சிகளிலும் உள்ள சில தலைவர்கள் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சிவசேனா கட்சி கவர்னர் மீது கடும் கோபம் அடைந்துள்ளது. தங்கள் தலைமையில் ஆட்சி அமைக்க கூடுதலாக ஒருநாள் அவகாசம் தராததற்கு சிவசேனா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? என்றும் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் காங்கிரஸ் கட்சி தனது உறுதியான ஆதரவை தெரிவிக்கும். ஆனால் சிவசேனா சரத் பவார் பின்னால் செல்லுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஓட்டு எண்ணிக்கை நடந்து 19 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னமும் புதிய ஆட்சியை எந்த கட்சியாலும் கொடுக்க இயலவில்லை. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் குழப்பமும் இழுபறியும் நீடிக்கிறது.

இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, சரத்பவாருடன் தொலைபேசியில் பேசினார். இன்று காலையும் அவர்கள் தொலைபேசியில் பேசி ஆலோசித்தனர். அதில் எத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக தனது முடிவை அறிவித்தால்தான் மகாராஷ்டிரா மாநில அரசியல் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 8.30 மணிக்குள் காங்கிரஸ் கட்சி தெளிவான முடிவு எடுக்காவிட்டால் அது குறுகிய கால ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வழிவகுக்கும். இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
Tags:    

Similar News