செய்திகள்
நடராஜன்

மின்கம்பி மீது பஸ் உரசி விபத்து- உயிரிழந்த அரியலூரை சேர்ந்த தொழிலாளி பற்றிய உருக்கமான தகவல்கள்

Published On 2021-01-13 05:06 GMT   |   Update On 2021-01-13 05:06 GMT
மின்கம்பி மீது பஸ் உரசியதில் உயிரிழந்த அரியலூரை சேர்ந்த தொழிலாளி பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீழப்பழூவூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நேற்று காலை தஞ்சை நோக்கி சென்ற தனியார் பஸ், மின்கம்பி மீது உரசியதில் அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த நடராஜன்(வயது 65) உள்பட 4 பேர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் இறந்த நடராஜன் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகிள்ளன. அதன் விவரம் வருமாறு;-

கூலி தொழிலாளியான நடராஜனுக்கு நீலாம்பாள் என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் தனக்கொடியை தஞ்சை மாவட்டம் வரகூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவருக்கு நடராஜன், பொங்கல் சீர் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் நாளை(வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தனக்கொடிக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக நடராஜன் பஸ்சில் வரகூருக்கு சென்றார்.

அங்கு தனக்கொடிக்கு பொங்கல் சீர் கொடுத்துவிட்டு, மீண்டும் விழுப்பணங்குறிச்சிக்கு திரும்புவதற்காக அவர் அந்த தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போதுதான் மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் அவருடைய உறவினர்கள் மற்றும் விழுப்பணங்குறிச்சி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News