செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

Published On 2021-04-06 10:30 GMT   |   Update On 2021-04-06 10:30 GMT
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடையில் உள்ள 286, 287, 288 வாக்கு சாவடிகளில் வாக்குபதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் வெளியில் காத்திருந்தனர்.

கோவை:

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடந்தது.

வெயில் காரணமாக பொதுமக்கள் வாக்களிக்க காலையிலேயே குவிந்தனர். பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உற்சாகமாக வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கி நடந்தது.

அன்னூர் அடுத்துள்ளது எல்லப்பாளையம். இங்குள்ள ஊராட்சி பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே ஏராளமான மக்கள் வாக்களிப்பதற்காக அங்கு வந்தனர். ஆனால் வாக்கு சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்கு காத்து நின்று வாக்களித்துச் சென்றனர்.

இதேபோல் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடையில் உள்ள 286, 287, 288 வாக்கு சாவடிகளில் வாக்குபதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் வெளியில் காத்திருந்தனர்.

பீளமேட்டில் 2 வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதானது. உடனடியாக தேர்தல் அலுவலர்கள் எந்திரத்தின் பழுதை நீக்கி வாக்குப்பதிவை தொடர்ந்தனர். சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட இலாகி நகர் 281 வாக்குசாவடியில் காலை 7 மணி முதல் 7.30 வரை வாக்குப்பதிவு நடந்தது. அதன் பின்னர் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் அதனை சரி செய் செய்து வருகின்றனர். இதனால் அந்த இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.

Tags:    

Similar News