செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் 12 விமானங்கள் ரத்து

Published On 2021-03-05 02:19 GMT   |   Update On 2021-03-05 02:19 GMT
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆலந்தூர்:

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டு தற்போது முழு அளவில் விமான சேவைகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து நாளொன்றுக்கு வருகை, புறப்பாடு விமானங்கள் 250-ல் இருந்து 260 வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல பயணிகள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.

ஆனால் நேற்று பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை பயணிகள் சுமார் 18,500 போ் மட்டுமே பயணித்தனர். அதேபோல் புறப்பாடு, வருகை விமானங்கள் என 231 விமானங்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.

இதற்கிடையே சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதைபோல் இந்த இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் பயணிகள் இல்லாமல் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News